திருப்பூர்: காங்கயத்தில், குடும்ப பிரச்னை காரணமாக, விஷம் அருந்திய பெண்ணை பஸ் ஸ்டாண்டில் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த தன்னார்வலர்களின் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.காங்கயத்தை சேர்ந்தவர் சண்முகம், 40. இவரது உறவினரான, சென்னிமலையை சேர்ந்த, 45 வயது பெண் ஒருவர் நேற்று காலை 11:00 மணியளவில், மாயமானார். இதனால், அந்த பெண் குறித்து, பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட்களில் விசாரித்து வந்தார்.தன் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண், விஷம் அருந்தி விட்டு காங்கயத்தில் இருந்து கரூர் செல்ல இருப்பதாக, சண்முகத்திடம் விட்டு, மொபைல் போனில் பேசி விட்டு, 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார்.இதுகுறித்து தகவலை, காங்கயத்தை சேர்ந்த 'பசியை போக்குவோம்' அமைப்பின் நிர்வாகி சரவணனிடம், சண்முகம் தெரிவித்தார். அவர் வெள்ளகோவிலை சேர்ந்த தென்றல் ஆம்புலன்ஸ் டிரைவர் தாமுவிடம், கூறியதால், கரூர் நோக்கி சென்ற பஸ்களில் அப்பெண்ணை தேடினார். ஆனால், கிடைக்கவில்லை.அதன்பின், வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சண்முகம் சொன்ன அடையாளங்களை வைத்து அப்பெண்ணை தேடிய போது, ஒரு கடை முன்பு மயக்க நிலையில், அந்த பெண் இருந்தார். உடனே, அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். துரிதமாக செயல்பட்டு பெண்ணை மீட்ட, தன்னார்வலர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரை, பொதுமக்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE