காரியாபட்டி--காரியாபட்டி மேலக்கள்ளங்குளம் எல்கையில் பூமிதான போர்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை அகற்ற கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்ட நிலையில்,அகற்றியதாக பொய்யான தகவலை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.மேலக்கள்ளங்குளத்தில் பூமிதான போர்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை நாசர்புளியங்குளம் பகுதி ஆடு, மாடு வளர்ப்போர் மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலம் அருகே தனியார் ஒருவர் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை வாங்கினார். அத்துடன் பூமிதான போர்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.வேலியை அகற்ற வலியுறுத்தி பொது மக்கள் சார்பாக இந்திய விவசாய சங்க கூட்டமைப்பு ஒன்றிய பொதுச் செயலாளரான நாசர்புளியங்குளம் சதுரகிரி ,ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டரிடம் மனு கொடுக்க ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றாமல் அகற்றியதாக வேறு ஒரு இடத்தின் போட்டோ எடுத்து கலெக்டருக்கு தகவல் அனுப்பினர் அதிகாரிகள் . இதை அறிந்த விவசாய சங்கத்தினர் மீண்டும் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், அகற்றியதாக பொய்யான தகவலை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பூமிதான போர்டு நிலங்களை மீட்கவும் வலியுறுத்தி உள்ளனர்.