தமிழ்நாடு

மூலவர்களை கண் முன் நிறுத்தும் ஓவியங்கள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, மைசூரு சாமுண்டீஸ்வரி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வீற்றிருக்கும் உற்சவ தெய்வங்கள், ஓவியங்களாக ஒரே இடத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த ஓவிய கண்காட்சி, சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' கல்வி வளாகத்தில் நடக்கிறது.இந்த ஓவியங்கள், 50 ஆண்டுகளாக தெய்வீக ஓவியங்களை வரையும்
 மூலவர்களை கண் முன் நிறுத்தும்  ஓவியங்கள்

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, மைசூரு சாமுண்டீஸ்வரி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வீற்றிருக்கும் உற்சவ தெய்வங்கள், ஓவியங்களாக ஒரே இடத்தில் காட்சியளிக்கின்றனர்.

இந்த ஓவிய கண்காட்சி, சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' கல்வி வளாகத்தில் நடக்கிறது.இந்த ஓவியங்கள், 50 ஆண்டுகளாக தெய்வீக ஓவியங்களை வரையும் ஆ.மணிவேலுவின் கைவண்ணத்தில் உருப்பெற்றவை.சென்னையில் வசிக்கும் மணிவேலுவிற்கு, தற்போது வயது 80. சிறு வயதில் இருந்தே சிற்பக்கலை கற்றவருக்கு, ஓவியக்கலையும் ஒரே சேர வந்தது. கூடவே, ஆன்மிகத்தில் அளவில்லாத நாட்டம் ஏற்பட்டதுஇவரது விநாயகர் ஓவியம் முதன் முதலாக 'கலைமகள்' தீபாவளி மலரில் வந்தது.

அதை பார்த்த பலரும், விநாயகரை கர்ப்பகிரகத்தில் வைத்து பார்ப்பது போல தத்ரூபமாக இருப்பதாக பாராட்டினர். பாராட்டியவர்களில் எழுத்தாளர் 'இதயம் பேசுகிறது' மணியனும் ஒருவர். அவர் 'ஞான பூமி' என்ற மாத இதழுக்கு, மாதம் ஒரு ஓவியம் வரைந்து கொடுக்க சொன்னார்.அப்படி ஆரம்பித்தது தான், பிரபலமான கோவில்களின் மூலவர் ஓவியங்கள். கோவிலில் முறையான அனுமதி பெற்று ஓவியம் வரைவார். மூலவரை போட்டோ எடுக்கக்கூடாது என்பதால், கூட்டம் இல்லாத நேரத்தில் மூலவரை அலங்காரம் செய்த நிலையிலும், அலங்காரம் செய்யாத நிலையிலும் பலமணி நேரம் உட்கார்ந்து பார்த்து 'அவுட் லைன்' வரைந்து கொள்வார்.மூலவருக்கு போடக்கூடிய ஆபரணங்களையும், அதே போல வரைந்து கொள்வார். இதற்கே இரண்டு மூன்று நாட்களாகும்.பின், வீட்டிற்கு வந்து ஓவியத்தை வரைய ஆரம்பித்தால், அந்த ஓவியம் அதன் தன்மையை பொறுத்து, இருபது நாட்கள் வரையிலும் கூட எடுத்துக் கொள்ளும். வரைந்த ஓவியத்தை பத்திரிகை அலுவலகத்திற்கு கொடுத்து விடுவார்.

பின் அடுத்த மாத பத்திரிகைக்கு தேவைக்கான ஓவியத்தை வரைய, அடுத்த ஊர்; அடுத்த கோவில் என, அவரது ஓவியப் பயணம் பல ஆண்டுகளாக தொடர்ந்தது.'இதுவரை 500க்கும் அதிகமான கோவில்களில் ஓவியங்கள் வரைந்திருப்பேன். எந்த கோவிலிலும் எந்த தெய்வத்தை வரையவும்,

இதுவரை எந்த தடங்கலும் வந்ததேயில்லை. காரணம், இறைவன் தன்னை வரைய என்னை தேர்ந்து எடுத்துக் கொண்டான்' என, பெருமிதம் கொள்கிறர் மணிவேலு.மேலும் அவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட ஓவிய கருவிகள் மற்றும் வாட்டர் கலர் வர்ணங்களைத் தான் ஓவியம் வரைய அதிகம் பயன்படுத்துவேன். எத்தனை ஆண்டுகளானாலும் ஓவியம் மங்காது.

புத்தகத்தில் வந்த ஓவியத்தை பார்த்து, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் மாநில கோவில்களில் இருந்தெல்லாம் அழைப்பு வந்தது; அங்கேயும் போய் வரைந்து வந்தேன்.கடவுளின் ஓவியங்களை தவிர, வேறு ஓவியங்களை வரைவதில்லை. பத்திரிகையில் வந்த ஓவியத்தைப் பார்த்து, அதே போல ஒரிஜினலாக தங்களுக்கும் வேண்டும் என, கேட்டு வருவோருக்கு, ஓவியம் வரைந்து கொடுப்பேன்.

அப்படி நுாற்றுக்கணக்கில் வரைந்த ஓவியம் காஞ்சி காமாட்சியாகும்.என் ஓவியங்கள், பலரது வீட்டின் பூஜை அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்களின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் காலண்டராகவும் வந்துள்ளது என்பதெல்லாம் இறைவன் எனக்களித்த பெருமை.ஓவியம் வரைய ஆரம்ப காலத்தில் 7,000 ரூபாய் வரை செலவானது. கடைசியாக சில மாதங்களுக்கு முன், நான் வரைந்த திருவண்ணாமலையார் ஓவியத்தை வரைய 50 ஆயிரம் ரூபாய் செலவானது.செலவுகளை எல்லாம் தாண்டி, எனக்கான சன்மானத்தை பல நிறுவனங்கள் நிறையவே வழங்கின. தனி நபர்கள் தங்கள் குல தெய்வங்களை வரைந்து கொடுக்கச் சொல்லியும் வாங்கியுள்ளனர்.வயது முதிர்வு காரணமாக, ஓவியர் மணிவேலுவால் கோர்வையாக ஒரு விஷயத்தை நினைவில் வைத்து பேச முடியவில்லை

என்பதால், கண்காட்சியை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் ஓவியர் மணிவேலுவின் குரலாக இருந்து, அவரது மகன் ஆறுமுகம் விளக்கம் தருகிறார்.மூலவரின் முன்னால் ஒரு சில வினாடிகளே நிற்க முடியாத பக்தர்கள் பலர், இருக்கையில் பல மணி நேரம் மூலவரின் முன் நிற்கும் பாக்கியம் கிடைக்கிறது. இங்கு மணிவேலுவின் 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.இறை இடம் இவர்' என்ற தலைப்பிலான இந்த ஓவிய கண்காட்சி, அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் விற்பனைக்கும் உண்டு. பார்வையாளர்கள் அனுமதி நேரம் பகல், 11:00 மணியில் இருந்து மாலை 5:00 மணி வரை; அனுமதி இலவசம். தொடர்புக்கு 95000 12166.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X