திருவண்ணாமலை: ''கடந்த ஆட்சியில், கலெக்டரே ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து பார்க் அமைத்ததால், ஊருக்குள் நீர் புகுந்துள்ளது,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் நேர் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி, 500 ஏக்கர் பரப்பு கொண்டது. இதற்கு, திருவண்ணாமலை மலையிலிருந்து மழை நீர், ஆடையூர் ஏரி வழியாக வருகிறது. நீர் வரும் சமயத்தில் சாலைகளை கடந்தோ, குடியிருப்புகள் நுழைந்தோ நாசம் செய்தது கிடையாது. கடந்தாண்டு, கலெக்டராக இருந்த கந்தசாமி, ஏரி உபரிநீர் வெளியேறும் வாய்க்காலை முழுவதுமாக ஆக்கிரமித்து, அப்போதைய திட்ட அலுவலர் ஜெயசுதாவுடன் இணைந்து, 4.50 கோடி ரூபாய் செலவில், அறிவியல் பார்க் அமைத்தார். தற்போது பெய்த மழையால், வேங்கிக்கால் ஏரி நிரம்பி, உபரிநீர் செல்ல வாய்க்காலின்றி, வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், ஐந்தடி உயரத்துக்கு தண்ணீர் சென்றது. இதனால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் சில இடங்களில், 10 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், 5,000க்கும் மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்தது. தற்போது சிறிதளவு மழையிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து, நேற்று முன்தினம் மாலை, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ''கடந்த ஆட்சியில் கலெக்டரே ஏரி வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்ததால், வெள்ளநீர் சாலைகளில் ஓடி, குடியிருப்புக்குள் புகுந்தது. எனவே, இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE