சம்பளம் கேட்டவர் கை துண்டிப்பு
ரேவா: மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி அசோக் சாகேத், 45. இவர், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் கணேஷ் மிஸ்ராவிடம், சம்பள நிலுவை தொகையை கேட்க நேற்று சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கணேஷ் மிஸ்ரா மற்றும் அவரது இரு சகோதரர்கள், அசோக்கின் ஒரு கையை துண்டித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசோக்கிற்கு, அறுவை சிகிச்சை வாயிலாக கை இணைக்கப்பட்டாலும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கணேஷ் மிஸ்ரா மற்றும் அவரது சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
சேவை மையங்கள் சாதனை
புதுடில்லி: நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்களை, 'இ ஷ்ரம்' தளத்தில் பதிவு செய்யும் பணிகள் நடக்கின்றன. இதுவரை 8.43 கோடிக்கும் அதிகமானோரின் தகவல்கள் பதிவாகி உள்ளன. அதில் 80 சதவீதமான 6.77 கோடி தொழிலாளர்களின் தகவல்கள், டிஜிட்டல் சேவைகளை வழங்கும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் வாயிலாக மூன்று மாதங்களில் பதிவாகி இருக்கிறது.
திரிணமுல் மீது குற்றச்சாட்டு
பனாஜி: கோவாவில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கோவா முன்னணி கட்சி கூட்டணி அமைக்க உள்ளது. இதை எதிர்த்து, அக்கட்சியின் செயல் தலைவர் கிரண் கண்டோல்கர் நேற்று முன்தினம் திரிணமுல் காங்.,கில் இணைந்தார். இதுகுறித்து கோவா காங்., பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''கோவாவில் மதச்சார்பற்ற ஓட்டுகளை பிரிப்பதன் வாயிலாக, எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு உதவும் நடவடிக்கைகளை திரிணமுல் காங்., செய்து வருகிறது,'' என்றார்.
ரூ.100 கோடி கறுப்பு பணம்
புதுடில்லி: குஜராத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு சொந்தமாக குஜராத் மற்றும் மும்பையில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் அந்நிறுவனம் கணக்கில் காட்டாமல் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கறுப்பு பணம் பதுக்கியது தெரியவந்துள்ளது. சோதனையில் 2.5 கோடி ரூபாய் பணம் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
ரூ.6 லட்சம் கோடி வருவாய்
புதுடில்லி: வரி வருவாய் குறித்து மத்திய வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் நேற்று கூறும்போது, ''நடப்பாண்டில் அக்., வரையிலான நிகர நேரடி வரி வசூல் 6 லட்சம் கோடி ரூபாய் என்பதுடன், இந்த நிதி ஆண்டில் சராசரி மாத ஜி.எஸ்.டி., வரி வசூல் 1.15 லட்சம் கோடியாக உள்ளது. ''இதன் வாயிலாக பட்ஜெட்டில் கூறப்பட்ட இலக்கை விட, இந்த நிதி ஆண்டில் வரி வருவாய் அதிகமாக இருக்கும் என உறுதியாக தெரிகிறது,'' என்றார்.
அசைவ உணவகத்தை அகற்றாதீர்
ராஜ்கோட்: குஜராத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், சாலையோரம் அசைவ உணவு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வண்டிகளை அகற்ற உத்தரவிட்டு உள்ளன. இது குறித்து மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறும்போது, ''நாட்டில் அனைவருக்கும் தாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் உள்ளது. சாலையோர அசைவ உணவகங்களை அகற்றுவது போன்ற கட்டாய நடவடிக்கை அவசியம் இல்லாதது,'' என்றார்.
ரயில் தண்டவாள பாதுகாப்பு
புதுடில்லி: நாட்டில் உள்ள ரயில் தண்டவாளங்கள் மாசடைவதை தடுக்கக்கோரிய மனு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தண்டவாளங்களை மலம் கழிப்பதற்கு பயன்படுத்துவது மற்றும் அருகில் வசிப்போர் கழிவு நீரை வெளியேற்றும் இடமாக மாற்றுவது உள்ளிட்டவற்றில், தனி நபர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என ரயில்வே நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE