சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கோயில் ரதவீதியை வைத்து கட்சியினர் ரண கள அரசியல் நடத்துவதால் சாலைப்பணி பாதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் குன்றக்குடி ஆதினத்துக்கு உட்பட்ட பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றி ரதவீதி பழுதடைந்ததை தொடர்ந்து 3 பக்கத்திலும் ரூ.14 லட்சம் செலவில் தார்சாலை அமைக்க 2019 ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர்கள் பணிகளை துவக்காமல் காலம் தாக்கியதுடன் வெவ்வேறு நபர்களுக்கு கைமாற்றி விட்டனர்.யாரும் பணிகளைத் துவக்கவில்லை.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்து தி.மு.க., அரசு பதவியேற்றவுடன் பணியை தொடர சாலையை கிளறி கற்களை கொட்டினர். தி.மு.க.,வினர் அதிகாரத்திற்கு வந்து விட்ட நிலையில் சாலை பணியை தொடர எதிர்ப்பு தெரிவித்து டெண்டரை ரத்து செய்ய வைத்தனர். 5 மாதங்களுக்கு மேலாகியும் சாலையை மீண்டும் சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே ஈகோ நிலவுவதால் ஊராட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.
இக்கோயில் மாசித்திருவிழா இன்னும் 3 மாதத்தில் வரவுள்ள நிலையில் சாலை இப்படியே இருந்தால் தேர் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.ராஜ்குமார் சதுர்வேதமங்கலம்: 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத வீதியை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு ரோட்டை கிளறி கற்களை கொட்டினர். அப்படியே வேலை நின்று போனது. கோயிலைச் சுற்றி உள்ள மக்கள் சாலையில் நடமாட முடியாத அளவிற்கு கஷ்டப்படுகின்றனர். தேரோட்டம் விரைவில் வரவுள்ளதால் அதற்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE