கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒருவர், அரை டிராயருடன் சென்றதால் வங்கிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, சமூக வலைதளத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.அதில், பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றுக்கு அரை டிராயருடன் சென்றபோது, தன்னை உள்ளே விட வங்கி ஊழியர்கள் மறுத்ததாக கூறியுள்ளார்.
'வாடிக்கையாளர்கள் கண்ணியமான உடையுடன் வர வேண்டும் என்கின்றனர். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடை கட்டுப்பாடு ஏதும் உள்ளதா' என, அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டிருந்தனர். அதே நேரத்தில் அரை டிராயருடன் சென்றதைக் கண்டித்தும் பலர் பதிவிட்டிருந்தனர்.

'எந்த உடைக் கட்டுப்பாடும் இல்லை. அதே நேரத்தில் உள்ளூர் சூழ்நிலைக்கேற்ற ஆடை அணிந்து செல்வது நல்லது' என, வங்கி தரப்பில் இருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு நேரில் வந்து விளக்கினர். சமரசம் ஏற்பட்டதால் என் புகாரை முடித்துக் கொள்கிறேன்' என, ஆஷிஷ் மற்றொரு பதிவை வெளியிட்டார்.
அதற்கு ஒருவர், 'ஏன் வங்கியில் இருந்து பேன்ட் வாங்கி தந்தனரா' என, கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, 'ஆமாம்' என, ஆஷிஷ் பதிவிட்டுள்ளார்.