கோவையில் சர்வதேச தரத்தில் செம்மொழிப் பூங்கா! கருணாநிதி அறிவிப்பை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் சர்வதேச தரத்தில் செம்மொழிப் பூங்கா! கருணாநிதி அறிவிப்பை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (25)
Share
கோவை : கோவையில், 12 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கோவை மத்திய சிறை, நகரின் மையப்பகுதியில், 165.4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் சிறை வளாகம் மட்டும் 72.3 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 92.3 ஏக்கர் பரப்பில்
DMK, M Karunanidhi, MK Stalin, Stalin, Karunanidhi

கோவை : கோவையில், 12 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோவை மத்திய சிறை, நகரின் மையப்பகுதியில், 165.4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் சிறை வளாகம் மட்டும் 72.3 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 92.3 ஏக்கர் பரப்பில் குடியிருப்புகள் உள்ளன. பயன்பாடற்ற பல கட்டடங்களும், காலி இடங்களும் உள்ளன. இவற்றில் நஞ்சப்பா ரோட்டை ஒட்டியுள்ள பகுதியில் மட்டும், வணிக வளாகம், பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் 150 ஏக்கர் பரப்பிலான இடம், சிறைத்துறை பயன்பாட்டிலேயே உள்ளது. 2010ம் ஆண்டில், கோவையில் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவைக்கென பல்வேறு திட்டங்களை அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தற்போதுள்ள மத்திய சிறையை இடம் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்பது முக்கியமான அறிவிப்பு.


ரூ. 20 கோடி ஒதுக்கீடு


இதுதொடர்பாக, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 2010 மார்ச் 26ல், அரசாணை (எண்:57) வெளியிடப்பட்டது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையிடம் கோவை செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 20 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. சிறை வளாகத்துக்கு வெளியே காலியாகவுள்ள 49.4 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்காவை அமைப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

மத்திய சிறையை வெள்ளலுாருக்கு முழுமையாக இடம் மாற்றியபின், அங்கு பூங்கா அமைக்கப்படுமென்று கூறி, நஞ்சப்பா ரோட்டில் சிறை நுழைவாயில் அருகே 'செம்மொழி பூங்கா' என்று பிரமாண்ட பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டது. இயற்கை, சுற்றுச்சூழல், உயிர்க்கோளத்தை பாதுகாக்கும் மையமாகவும், மாபெரும் பொழுதுபோக்கிடமாகவும் இது அமையுமென்றும் அரசாணை உறுதியளித்தது.

வடிவமைப்பு, திட்ட அறிக்கை தயாரித்தல், செடிகள் வளர்த்தல், மரக்கன்றுகள் நடுதல், கட்டமைப்புப் பணிகள் என எல்லாப்பணிகளையும், 22 மாதங்களில் முடிப்பதென்று காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. பிரிட்டன் கியூ பூங்காவுக்கு இணையாக இது உருவாக்கப்படும்; பூங்காவை ஒட்டி, சர்வதேச தரத்திலான மாநாட்டு அரங்கமும் அமைக்கப்படுமென்றும் வாக்குறுதி வாரி வழங்கப்பட்டது. ஆனால், மாநாடு முடிந்தபின், அதற்கான எந்த வேலையும் நடக்கவில்லை.


latest tamil news
முதல்வர் வாக்குறுதி


கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவையும் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பல்வேறு தொழில் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், இதை நேரிலும் வலியுறுத்தியுள்ளனர். அப்போது, 'கண்டிப்பாக பரிசீலிக்கப்படும்' என்ற வாக்குறுதியை முதல்வர் தெரிவித்துள்ளார்.

கோவையில் மத்திய சிறை இடம் மாற்றம், செம்மொழிப் பூங்கா அமைப்பது என்ற அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்ற தகவல், அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சியினர் வட்டாரத்தில் பரவி வருகிறது. இதைச் செய்தால், கருணாநிதியின் அறிவிப்பை செயல்படுத்திய திருப்தியுடன், கோவை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியதற்கான பலனும் கிடைப்பது நிச்சயம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X