புதுடில்லி : 'மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உள்நாட்டில் தான் இருக்கிறார்' என, அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, அவரை கைது செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பரம்வீர் சிங் மீது மிரட்டி பணம் பறித்ததாக ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் மே மாதம் விடுப்பில் சென்ற அதிகாரி பரம்வீர் சிங் அதன் பின் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.இதையடுத்து அவரை தலைமறைவானவர் என, மும்பை நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, பரம்வீர் சிங் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது தெரியாத வரை கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியாது' என, சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பரம்வீர் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:பரம்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்ப்பதற்கு காரணம் பயம் அல்ல. சி.பி.ஐ., நீதிமன்றத்தில் அவர் ஆஜராக தயாராகவே உள்ளார்.
அவர் மீது ஆறு வழக்குகள் உள்ளன. அவருக்கு மும்பை போலீசிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளதாக கருதுகிறார்.
மூத்த அதிகாரியான அவர் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன் என்றும், கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படியும் கோருகிறார்.இவ்வாறு அவர் தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து பரம்வீர் சிங்கை கைது செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE