மும்பை : சீக்கியரை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, மும்பை போலீசில் சீக்கிய அமைப்பு பிரதிநிதிகள் புகார் அளித்துள்ளனர்.
விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா, சீக்கியர்களுக்கு எதிராக சில கருத்துகளை கூறியிருந்தார். இதற்கு, பல சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவினர், மஹாராஷ்டிர மாநிலம் மும்பை போலீசில் நேற்று புகார் கொடுத்தனர்.அகாலி தள மூத்த தலைவரான மஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான குழுவினர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: விவசாய போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டு கங்கனா பேசியுள்ளார்.
மேலும் சீக்கியர்களை இழிவுபடுத்தும் வகையில் பல கருத்துகளை கூறியுள்ளார். இது, உலகெங்கும் உள்ள சீக்கிய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு மதத்தினருக்கும் எதிராக கருத்து தெரிவிக்காத வகையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.