தமிழ்நாடு

கோவை நகரில் சாலை சந்திப்புகளில் விபத்துக்கு வழிகாட்டி : விதிகளை மீறும் விளம்பரங்கள்

Added : ஆக 06, 2011
Advertisement

கோவை : கோவையில் அரசு விதிகளை மீறி, தெரு முனைகளிலும், சாலை சந்திப்புகளிலும் விளம்பரங்களை வைக்க அனுமதி தரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விளம்பரப் பலகை உரிமம் வழங்குதல் மற்றும் விளம்பரங்களுக்கான வரி வசூலித்தல் விதிகள், கடந்த 2003ல் உருவாக்கப்பட்டு, இது தொடர்பான அரசாணையும் (எண்:47 தேதி: 26-06-2003) வெளியிடப்பட்டது.


இதன்படி, கல்வி நிறுவனங்கள், பிரபல வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கான படுக்கை வசதியுள்ள மருத்துவமனைகள் முன்பாக விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கக்கூடாது. எந்தவொரு சாலை மற்றும் தெருக்களின் சந்திப்பிலிருந்தும் 100 மீட்டர் தூரத்துக்கு, எந்த விளம்பரமும் வைக்க அனுமதிக்கக் கூடாது.விதி எண் 6ன்படி, 100 அடி அகலமுள்ள ரோட்டில், 24 அடிக்கு 12 அடி (பக்கவாட்டில்) அளவுள்ள விளம்பரப் பலகையும், 50 அடியிலிருந்து 100 அடிக்குள் அகலமான ரோட்டில் 15 அடிக்கு 10 அடி அளவுள்ள விளம்பரப் பலகையும் வைக்க அனுமதிக்கலாம்; அதற்கும் குறைவான அகலமுள்ள ரோடாக இருந்தால், 12 அடிக்கு 6 அடி (பக்கவாட்டில் அல்லது செங்குத்தாக) வைத்துக் கொள்ளலாம்.இரண்டு விளம்பரப் பலகைகளுக்குமான இடைவெளி, 5 அடி இருக்க வேண்டுமென்பது உட்பட பல்வேறு விதிகளையும் அந்த அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், கோவை நகரில் சமீப காலமாக சாலை சந்திப்புகளிலும், தெரு முனைகளிலும் தாறுமாறாக விளம்பரங்கள், இஷ்டப்பட்ட அளவில் வைக்கப்படுகின்றன.மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்த இடங்களில் விளம்பரங்களை வைக்க, கோவை மாவட்ட நிர்வாகமும் அனுமதியை வாரி வழங்கியுள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, அவிநாசி ரோடு மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின், நடுப்பகுதியில் வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் விளம்பரங்கள் வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர்க்கு (வளர்ச்சிப்பிரிவு) கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் புகார் அனுப்பியது. இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன், இந்த விதிமுறைகளைக் குறிப்பிட்டு அனுப்பிய புகாருக்கு பதில் வந்தது. அதில், அதே அரசாணையைக் குறிப்பிட்டு, "அதன்படி அனுமதி தரப்பட்டது' என்று "பொறுப்பாக' பதில் தரப்பட்டிருந்தது.தற்போது அதே புகாரை, கலெக்டருக்கு அனுப்பி விட்டு, நடவடிக்கைக்காக இந்த அமைப்பு காத்திருக்கிறது. விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக அனுமதி தரப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள இந்த அமைப்பு, "நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே, தவறுக்கு துணை போயிருப்பதாக' குற்றம் சாட்டியுள்ளது.சாலை சந்திப்புகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரங்களையும் அகற்ற வேண்டுமென்றும் இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. இத்தகைய விளம்பரங்களால், சாலை பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு, விபத்துக்கான வாய்ப்பும் அதிகம் என்பதால், விதிமீறிய விளம்பரங்களை அகற்ற வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்புமாகவுள்ளது.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X