சிறுவாணி தண்ணீரை காலி செய்யும் கேரளா! முதல்வர் கவனம் செலுத்துவாரா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணி தண்ணீரை காலி செய்யும் கேரளா! முதல்வர் கவனம் செலுத்துவாரா?

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (7)
Share
கோவை : நீர்க்கசிவை காரணம் காட்டி சிறுவாணி அணையில் இருந்து கேரளா தண்ணீர் வெளியேற்றுவதை தடுக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.கோவை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக சிறுவாணி அணை இருக்கிறது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் இருந்தாலும், அணை கேரளாவில் அமைந்துள்ளது. அணையில் இருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர்,


கோவை : நீர்க்கசிவை காரணம் காட்டி சிறுவாணி அணையில் இருந்து கேரளா தண்ணீர் வெளியேற்றுவதை தடுக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.



latest tamil news




கோவை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக சிறுவாணி அணை இருக்கிறது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் இருந்தாலும், அணை கேரளாவில் அமைந்துள்ளது. அணையில் இருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர், தமிழகம் சார்பில் குடிநீர் பயன்பாட்டுக்காக எடுக்கப்படுகிறது.

அணையில் 50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். ஆனால், கேரள அதிகாரிகள் அணை நிரம்ப விடுவதில்லை. நீர்க்கசிவை காரணம் காட்டி, நீர்த்தேக்க உயரத்தை 45 அடியாக தன்னிச்சையாக குறைத்து விட்டனர். இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இதே வழிமுறையை பின்பற்றுகின்றனர். சில வாரங்களாக பெய்யும் மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


latest tamil news




வழக்கம் போல் கேரள அரசும், மதகை திறந்து ஆற்றில் தண்ணீரை வெளியேற்றுகிறது. அதிகபட்ச உயரம் 45 அடி என்று அறிவித்தாலும், அந்த மட்டத்துக்கு வரும் முன்னரே தண்ணீர் வெளியேற்றுவதை கேரள அதிகாரிகள் வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 30 செ.மீ., உயரத்துக்கு அணை மதகு உயர்த்தி, ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்திடம் பராமரிப்பு கட்டணம் வாங்கும் கேரளா, அணையை முறைப்படி பராமரிப்பு செய்திருந்தால் நீர்க்கசிவு ஏற்பட வாய்ப்பில்லை.உண்மையிலேயே நீர்க்கசிவு உள்ளதா, பராமரிப்பு பணி நடக்கிறதா என்பதை பார்வையிட தமிழக பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் யாரும் சிறுவாணி அணைக்கு நேரில் செல்வதில்லை.

அணைக்கு செல்லும் வழித்தடத்தில் நிலச்சரிவு என்பதை காரணம் காட்டி, அதிகாரிகள் அங்கு செல்லாமல் இருப்பதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர். அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்தால், மண்ணார்காடு வழியாக சென்று அணையை பார்வையிட்டு வர முடியும் என்பதே உண்மை இதே நிலை தொடர்ந்து நீடித்தால், முல்லை பெரியாறு அணையில் தற்போதுள்ள சிக்கல் போலவே சிறுவாணி அணையிலும் கேரளா ஏற்படுத்தி விட வாய்ப்புள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உரிய கவனம் செலுத்த வேண்டும்.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் - கம்யூனிஸ்ட் கட்சி தான், கேரளாவில் ஆட்சியில் இருக்கிறது. அவர்களுடன் சுமூக பேச்சு நடத்தி, பிரச்னை மேலும் சிக்கல் ஆகாமல் தவிர்க்கவும், சிறுவாணியில் கூடுதலாக நீர் தேக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X