பெண்ணாடம்-கருங்குழி தோப்பு பகுதி மக்கள் மின்இணைப்பு கோரி, உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 7 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை. குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க உதவி பொறியாளரிடம் கேட்டனர். கோவில் நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்று வருமாறு மின்துறையினர் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:30 மணியளவில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் வழக்கறிஞர் பத்மநாபன் தலைமையில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன், விருதை - திட்டக்குடி சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE