பெங்களூரு-''விவசாயிகளுக்கு ஆதரவான பல புரட்சிகரமான அம்சங்கள் கொண்ட மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திரும்ப பெற்றதற்கு போலியான விவசாய போராட்டக்காரர்கள், நாட்டின் நலனை எப்போதும் விரும்பாத காங்கிரசார், வெற்றி தினம் கொண்டாடுவது துரதிருஷ்டம்,'' என, பெங்களூரு தெற்கு பிரிவு பா.ஜ., தலைவர் ரமேஷ் குற்றம்சாட்டினார்.இது குறித்து அவர் கூறியதாவது:தாங்கள் விளைவித்த விவசாய உற்பத்திகளை, விருப்பமான இடத்திலோ அல்லது அதிக விலையை யார் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பளிக்கும், விவசாய சட்டத்தை எதிர்த்து, விவசாய தலைவர்கள் என கூறிக்கொண்டோர், வெறும் இரண்டு மாநிலங்களில் போராட்டம் நடத்தினர்.இந்த இரு மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் புதிய விவசாய சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் துாண்டுதலின்படி, போலியான விவசாய போராட்டக்காரர்கள், இடைத்தரகர்கள் நடத்திய அர்த்தமில்லாத போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது என காங்கிரசார் நினைப்பது விவேகமற்ற செயல்.அன்றைய முதல்வர் குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1980ல் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கும், 1,500 ரூபாய் லெவி கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும்.இந்த சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் உண்மையான விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், பீதியடைந்த அன்றைய காங்கிரஸ் அரசு, நர்குந்த், நவல்குந்த் தாலுகாக்களில் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல விவசாயிகள் இறந்ததை காங்கிரஸ் மறந்துவிட்டது.அதே போன்று, 2001ல் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், அன்றைய காங்., அரசு சென்னப்பட்டணா அருகில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அப்பாவி விவசாயிகள் பலியானதையும் அக்கட்சி மறந்துள்ளது.இவ்விரண்டு சம்பவங்களும், விவசாயிகளுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாட்டுக்கு உதாரணம்.ஆனால், விவசாயிகளுக்கு ஆதரவான, மிக சிறந்த அம்சங்கள் அடங்கிய விவசாய சட்டத்துக்கு எதிராக, போராட்டம் நடத்த விவசாயிகளை, காங்கிரஸ் தன் அரசியல் லாபத்துக்காக துாண்டியது.போராட்டத்துக்கு தேவையான வசதிகளை இக்கட்சி செய்து கொடுத்ததற்கு ஆதாரம் பகிரங்கமானது.பிரதமர் மோடி, புதிய விவசாய சட்டத்தை திரும்ப பெற்றது, மக்களின் நலனுக்காக தானே தவிர, போலி போராட்டக்காரர்களின் வெத்து மிரட்டலுக்கு அல்ல.கூடுதல் கவனம் நாட்டின் பாதுகாப்புக்கு, ஏதாவது அபாயத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தான், சீனா, வங்கதேச நாடுகள், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்களின் அபாயகரமான வேலைகளிலிருந்து, நாட்டை காப்பாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.ஓராண்டாக டில்லியில் நடந்த காங்கிரசால் துாண்டப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, பாதுகாப்பு அளித்த ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், புதிய விவசாய சட்டத்தை திரும்ப பெற்றார்.வரும் நாட்களில், விவசாயிகளுக்கு புதிய விவசாய சட்டத்தில், தங்களுக்கு அனுகூலமாக உள்ள அம்சங்களை, விவசாயிகள் புரிந்து கொள்வர். அதன்பின் சட்டம் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE