சென்னை : தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட வந்துள்ள மத்திய குழுவினர், நேற்று நான்கு மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்; இன்று ஏழு மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் பெரும் பாதிப்புக்குஉள்ளாகினர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.
சேதங்களை பார்வையிட, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு குழுவை அனுப்பி உள்ளது. மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், ஆறு பேர் குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது.
இக்குழு இரண்டு பிரிவாக பிரிந்து, நான்கு மாவட்டங்களில் ஆய்வு செய்தது. ராஜிவ் சர்மா தலைமையில், நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர், நேற்று காலை சென்னை திரு.வி.க., நகர் மண்டலம் வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜவஹர் நகர், ராயபுரம் அழகப்பா சாலையில், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர்.
வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர், வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினரிடம் எடுத்துரைத்தனர். அதன்பின் மத்திய குழுவினர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பார்வையிட்டனர். பின் புதுச்சேரி சென்றனர்.
இக்குழுவினர் இன்று கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் வெள்ள சேதத்தை பார்வையிடுகின்றனர்; இரவு சென்னை திரும்புகின்றனர்.மற்றொரு குழுவினர் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை சேதங்களைப் பார்வையிட்டனர்.
இன்று காலை சென்னை வந்து, வேலுார் செல்கின்றனர். மதியம், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேதத்தை பார்வையிட்டு, இரவு சென்னை திரும்புகின்றனர்.நாளை தலைமை செயலகத்தில், முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். மாலை டில்லி புறப்பட்டு செல்ல உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE