வேளாண் சட்டங்கள் வாபஸ் பின்னடைவல்ல; பாடம் தான்!

Added : நவ 23, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை சட்டம் என மூன்று சட்ட மசோதாக்களை, கடந்த ஆண்டு செப்டம்பரில், பார்லிமென்டில் மத்திய அரசு நிறைவேற்றியது.இந்த சட்டங்கள், விவசாயிகளின் நலனை பாதுகாக்கும். அவர்கள், தங்களின் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். குறைந்த பட்ச ஆதரவு
வேளாண் சட்டங்கள் வாபஸ் பின்னடைவல்ல; பாடம் தான்!

விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை சட்டம் என மூன்று சட்ட மசோதாக்களை, கடந்த ஆண்டு செப்டம்பரில், பார்லிமென்டில் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த சட்டங்கள், விவசாயிகளின் நலனை பாதுகாக்கும். அவர்கள், தங்களின் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். குறைந்த பட்ச ஆதரவு விலை தரும் நடைமுறை தொடரும். விவசாய துறையில் அன்னிய முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என மத்திய அரசு கூறியது. ஆனால், இந்த மூன்று சட்டங்களையும், விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களின் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, கடந்த ஆண்டு நவம்பர் ௨௬ முதல் தலைநகர் டில்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு பல முறை பேச்சு நடத்தியும் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் தான், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' பெறுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த விஷயத்தில், விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளும், போராட்டம் நடத்திய விவசாய சங்கங்களும் இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடி வருகின்றன. இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால் பெரு நிறுவனங்களோடு விவசாயிகள் ஒப்பந்தம் செய்ய நேரிடும். அதனால், சொந்த நிலத்திலேயே அவர்கள்கூலி தொழிலாளர்களாக மாற்றப்படுவர்; வசதிபடைத்தவர்களுக்கு சாதகமான சட்டம் இது. விவசாய உற்பத்திக்கு தேவையானவற்றை அரசு செய்வதை தவிர்த்து, அதன் பொறுப்பை பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதாக உள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

அதனால் தான், மத்திய அரசின் முடிவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. விவசாயிகளின் போராட்டம், ஓராண்டை நிறைவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. அதே நேரத்தில், விவசாயிகளின் போராட்டத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை பார்க்கும் போது, மத்திய அரசு இந்த வாபஸ் முடிவை முன்னதாகவே எடுத்திருக்கலாம் என்ற கருத்தையும் மறுப்பதற்கு இல்லை. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்த போது, அதை குறைக்க வேண்டும் என பல தரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்த்த மத்திய அரசு, தீபாவளி சமயத்தில் அவற்றின் விலையை கணிசமாக குறைத்து, மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தது. அதுபோல, தற்போது மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளது.

மற்ற துறைகளை போன்றது அல்ல விவசாயத் துறை. காலநிலை மாற்றம், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் பாதிப்பு, விளைச்சல் அதிகரிப்பதால் விலை குறைவது என விவசாயிகள், அவ்வப்போது பல சவால்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் நிரந்தர வருமானம் பெறுவது சாத்தியமில்லாதது. அதனால், அவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்தது வரவேற்கத்தக்கதே.

அதே நேரத்தில், விவசாயிகளின் மற்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றும் விஷயத்திலும், மத்திய அரசு பிடிவாதமான போக்கை கைவிட்டு, இணக்கமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.உழவன் சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை மனதில்கொண்டு, கடினமான உழைப்பாளிகளான அவர்களை எப்போதும் கவுரவப்படுத்த வேண்டும்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை விரைவில் பார்லிமென்டிலும் நிறைவேற்ற வேண்டும். சட்டங்களை வாபஸ் பெற்றதை மத்திய அரசு பின்னடைவாக கருதாமல், மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகவும், ஒரு அனுபவ பாடமாகவும் நினைக்க வேண்டும். இனி, அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டு, விவசாயிகளின் நம்பிக்கையை பெறும் வகையில், மத்திய அரசு செயல்பட வேண்டும்.

விவசாயிகளின் நலன் தொடர்பாக, எந்த ஒரு சட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும், இனி அது குறித்து, நாடு தழுவிய அளவில் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்களின் கருத்துகளை கேட்டு, அதற்கேற்ற வகையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். பார்லிமென்டிலும் விரிவாக விவாதிப்பதோடு, மாநில அரசுகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதுவே நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் நல்லது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-நவ-202118:30:23 IST Report Abuse
மலரின் மகள் தீவிரவாத பயங்கரவாத அந்நிய சக்திகள் பின்னணியில் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொன்னதும். தேசிய பிலாய்வு மையங்கள், பஞ்சாபி முதல்வர் உள்துறை அமைச்சருடன் விலாவாரியாக கோப்புக்களில் தகவல்கள் அளித்ததும், பணம் யு.கே, கனடா, பாகிஸ்தானிலிருந்து வந்ததும் சந்தேகமாக்கியது அதை என்று சொல்கிறார்கள். வேனும் சில இடைத்தரகர்கள் தங்களின் லாபத்திற்காக இந்த செயலை செய்திருப்பார்கள் என்று சொல்வதை பலர் ஏற்றார்கள் அதை ஏற்பது சரியா என்று தெரியவில்லை. பொதுவாக ப்ரோக்கர்கள் இடைத்தரகர்கள் இது போன்று போராட மாட்டார்கள், புறவாசல் வழியாக சென்று பணத்தை அல்லி கொடுத்து காரியத்தை முடிப்பார்கள். புறவாசல் சமாதானம் தான் ப்ரோக்கர்களின் தந்திரம். ஒன்றில்லை என்றால் வேறொன்று என்று தங்களுக்கு வேண்டிய சாதகத்தை ஆட்சியிலுள்ள சிலர் எதிர்பார்ப்பதை கொடுத்து சரிசெய்து விடுவார்கள். அப்படி என்றால் உண்மையில் என்ன நடந்திருக்கும். நதி மூலம் ரிஷி மூலம் தேடுவதை போன்றது தான். ஒரே ஒரு காரணம் இராது. பலரும் தங்களின் எதோ சிலவற்றிற்காக காலத்தில் குத்திருக்கிறார்கள். முதலில் இதை அரசியலாக செய்ததது ஆம் ஆத்மீ கட்சி தான் என்று சொல்கிறார்கள் . போராட்டம் என்ற வகையில் ஆட்சிக்கு வந்ததது அவர்கள் தான் சமீப வரலாற்றில். பஞ்சாபில் வெற்றிபெற வரும் தேர்தலில் இதை ஆமாத்தமி ஒரு சாதனமாக எடுத்தது என்றும் சொல்கிறார்கள். நம்பும் படி தெரிகிறது. காங்கிரசும் ராகுலும் எங்கிருந்து எதற்காக வந்தார்கள்? அவர்கள் கெஜ்ரிவாலின் போராட்ட தந்திரங்களை அறிந்தார்கள். போராடுபவர்களுக்கு ஆதரவு நல்கி அவர்களை ஓட்டுக்களை தாங்களும் அல்லி விடலாம் அல்லது கெஜ்ரிக்கு போக தங்களுக்கு கிடைக்கும் ஓரளவிற்கு திருப்தியாக என்று அவசர அவசரமாகவும் வழக்கம் போலவும் மூத்த தலைவராலை கலந்தாலோசிக்காமல் மனதில் உதித்த யுக்தியை டுவிட்டேர் மூலம் செய்து அவப்பெயரையே பெற்றிருக்கிறார்கள். நேரிடையாக காலத்தில் குத்தித்தால் தான் போராட்டத்தின் பலன் கிடைக்கும் என்ற பாலபாடம் அறியவில்லையா அல்லது போராடுவதற்கு ஆட்களில்லையா என்று தெரியவில்லை. எதோ காலையில் போராட்டம் என்று சொன்னோமா தடையை மீறினோமா கைது என்று பெயரளவிற்கு அழைத்து செல்லப்பட்டு விடுதலை என்று சில மணியில் அனுப்பி விட்டார்களா அதுபோன்ற போராட்டம் தான் சரி என்று நினைக்கிரார்களையோ என்னவோ,. பஃபூண் இல்லாத தெருக்கூத்துக்கள் சுவையிருக்காது என்பதற்காக இடையில் சிலர் அனுமதித்தர்களா என்னவோ தெரியாது. கேரளாவில் சபரி மலை விவகாரத்தட்டில் மூக்கை நுழைத்து அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் இறுதியில் தோசை திருப்பப்பட்டு காங்கிரசிற்கு தான் ஆட்சி வரும் என்ற வழக்கத்தை மாற்றி தோல்வியை சந்தித்தார்கள். ஆமாத்மியால் கொணரப்பட்ட போராட்டம் தேர்தலை கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. இறங்கி வந்து தான் ஓட்டுக்களை அள்ள முடியும் என்று கீழிறங்கி வந்து ஓட்டுக்களை அள்ள முடியும் என்று நினைத்தர்களையோ என்னவோ, சட்டம் திரும்ப அழைக்கப்படுகிறது என்று ஒரு விமர்சனம். அரசு தவறே செய்யவில்லையா என்றால் அப்படி சொல்வதற்கில்லை. முதலில் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதத்திற்கு உட்படுத்த பட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தி சிறப்பான விவாதங்கள் நிறைகுறைகளை ஆய்ந்து பின்னர் அதனை சட்டமாக்கியிருக்கவேண்டும். திடு தொப்பென்று அவசர கதியில் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் ஆகையால் சட்டத்தை நிறைவேற்றுவது சுலபம் என்று நினைத்து செயல்பட்டது தவறு. இதை விட மிக மிக முக்கியமான ஜி எஸ் டி சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பலாவா. மாநிலங்களை கலந்தாலோசித்தர்கள், நிறைய முறை பேசினார்கள் ஒருமித்த கருத்துக்களை உருவாக்கினார்கள் சட்டம் எளிதானது பின்பு. அருண் ஜெட்லீயின் திறமை இன்று பாராட்டப்படுகிறது. முத்தலாக் சட்டம் நிறைவேறியது, பிரச்சினைகள் வரவில்லை, தொடரவில்லை. இப்படி எத்துணையோ சட்டங்கள் ஏற்கப்பட்டன. அனால் வேளாண் சட்டங்கள் சிறப்பாகத்தான் இருக்கின்றன ஆனால் அது வந்த விதம் தான் சரியல்ல. கொரநா காலத்தில் லாக் டவுன் இருக்கும் நேரத்தில் மக்களுக்கு பிரச்சினைகள், பிரதிநிதிகளால் டில்லிக்கு செல்ல கூட முடியாத நிலை, அப்படி இருக்கும் நிலையில் எதோ புறவாசல் வழியாக செய்துவிட்டது போலச்செய்தது சரியல்ல என்ற பாடத்தை அரசு கற்றுக்கொண்டிருக்கிறதா இப்பொது? கட்டாயப்படுத்தி இருக்க கூடாது. பறிச்சாத்த முறையில் சில மாநிலங்களில் அல்லது ஏற்கும் அனைத்து மாநிலங்களிலும் இதை அமல் படுத்தி விட்டு அதன் பலன்களை விவசாயிகள் அடைவதை பார்த்து விவசாயிகளே இந்த சட்டங்கள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் வகைக்கு செய்திருக்கலாம். இனி அரசு கொஞ்சம் விழிப்பாக அனைவரையும் அனுசரித்து நின்று யோசித்து பங்களிப்புக்களை ஏற்று செய்யும், செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X