அமிர்தசரஸ்: காங்கிரஸ் கட்சியினர் ஆம்ஆத்மி கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும், 25 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2, 3 எம்.பி.,க்கள் தங்கள் கட்சியில் சேர விரும்புவதாகவும் டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லி அரசு பள்ளிகளின் தரத்தை நாங்கள் முன்னேற்றியதை போல, பஞ்சாபில் உள்ள அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்துவோம். எப்படி தரம் உயர்த்துவது என மற்ற கட்சிகளை விட எங்களுக்கே நன்றாக தெரியும்.
ஆசிரியர்களின் பிரச்னைகள் அனைத்தும் அவசரகால அடிப்படையில் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறேன். காங்கிரஸில் உள்ள பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அந்த குப்பைகளை எடுத்துச்செல்ல விரும்பவில்லை. அவ்வாறு செய்ய துவங்கினால், பஞ்சாப் காங்கிரசை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.,க்கள் இன்று மாலைக்குள் எங்களுடன் வந்து இணைவர்.

காங்கிரசின் 25 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2, 3 எம்.பி.,க்கள் எங்கள் கட்சியில் சேர விரும்புகின்றனர். நேற்று, பஞ்சாப் முதல்வர் சன்னி, அரசு மணல் மாபியாவை முடிவுக்குக் கொண்டு வந்து, மணல் விலையை குறைத்துள்ளதாகக் கூறினார். ஆனால் மாநில காங்., தலைவர் சித்து இந்த தகவல் தவறானது என்றும், மணல் மாபியா இன்னும் இயங்குகிறது எனவும் கூறினார்.
அவரது தைரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன். சன்னி பொய் சொல்கிறார் என்று சித்துவே கூறியுள்ளார். சித்து மக்கள் சார்ந்த பிரச்னைகளை எழுப்புகிறார். ஆனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் அவரது குரலை நசுக்க முயல்கிறது. பஞ்சாப் அரசு அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE