வேலுார்: ‛‛பாலாற்றில் வந்த வெள்ளத்தினால், 70 டி.எம்.சி., நீர் கடலில் வீணாக கலந்தது,'' என்று பாலாறு பாதுகாப்பு இயக்க தலைவர் வெங்கடேசன் கூறினார்.
திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த தொடர் மழை மற்றும் கர்நாடகா மாநிலம், பேத்தமங்கலம் அணை திறப்பு ஆகியவற்றால் நாள்தோறும் ஒரு லட்சம் கன அடி நீர் வேலுார் பாலாறு வழியாக ராணிப்பேட்டைக்குச் சென்றது. ஆந்திரா மாநிலம், கலவகுண்டா அணையிலிருந்து நாள்தோறும் 1 லட்சம் கன அடி நீர் வெளியேறி, பொன்னை ஆற்றுக்கு வந்து ராணிப்பேட்டை பாலாற்றில் கலந்தது.
இங்கிருந்து வாலாஜா பாலாறு அணைக்கட்டு வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு அருகே வங்கக்கடலில் கடந்த 17ம் தேதி முதல் கலந்து வருகிறது. இதனால் யாருக்கும் பயனில்லாமல் பாலாற்று தண்ணீர் கடலில் வீணாக கலந்து வருகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து பாலாறு பாதுகாப்பு இயக்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை பாலாற்றில் வெளியேறி வங்கக்கடலில் 70 டி.எம்.சி., வரை நீர் கலந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மேலும் 30 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்க வாய்ப்புள்ளது.
பாலாற்றின் குறுக்கே 10 கி.மீ., துாரத்திற்கு ஒரு தடுப்பணை கட்டியிருந்தால், இந்த நீரை சேமித்திருக்கலாம். 138 ஆண்டுக்கு பிறகு வந்த பாலாற்று நீரை சேமித்திருந்தால் 20 ஆண்டுக்கு வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. மூன்று போகம் பயிர் சாகுபடி செய்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE