புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதனால், வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் வீரர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வீரர்களின் உணவு விஷயத்திலும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதாக செய்தி வெளியானது. அதாவது, இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்த உத்தரவு வரும்வரை, ஹலால் செய்யப்பட்ட உணவை மட்டும்தான் சாப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வீரர்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட கூடாது என பிசிசிஐ முடிவு செய்வதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்ததாக வெளியான செய்திக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. 'உணவு விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை,' என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE