கான்பூர்: ‛‛சீக்கியர்களுக்கு வேறு யாரும் செய்யாத அளவு அதிக நன்மை செய்தவர் மோடி,'' என்று, அகில இந்திய பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காங்கிரஸ், பா.ஜ., சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கி விட்டன. உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரமான கான்பூரில் பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாபா நம்தேவ் குருதுவாராவுக்கு வருகை தந்தனர்.

அப்போது பேசிய ஜே.பி.நட்டா பிரதமர் மோடி சீக்கிய சகோதரர்களுக்கு செய்த நன்மைகள் இதுவரை யாரும் செய்யாதது என்றுள்ளார். மேலும், தான் சமூக சேவையை தொடர்ந்து மேற்கொள்ள பாபா நம்தேவின் ஆசியைப் பெற வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
மராத்தி, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரான பாபா நம்தேவ் குறித்து பெருமிதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கோரக்பூர் நகருக்கு செல்ல ஜே.பி.நட்டா திட்டமிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளில் 312 தொகுதியை பா.ஜ., கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாடி கட்சி 47 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் 19 தொகுதிகளும், காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளையும் பிடித்திருந்தன. இந்நிலையில் மீண்டும் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அமைக்க தற்போது யோகி ஆதித்யநாத் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.