சென்னை:மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், நேற்று வரை மின்சாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார் எண்ணிக்கை, 5 லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழக மின் வாரியம், மின் தடை புகாரை தெரிவிக்க, கணினி மைய எண், 'வாட்ஸ் ஆப்' எண் என, 100க்கும் மேற்பட்ட எண்களை பொது மக்களுக்கு வழங்கியது.மேலும், உதவி பொறியாளர், செயற்பொறியாளர் மொபைல் போன் எண்களிலும் புகார் அளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. பலர், மொபைல் போன், தொலைபேசி எண்களுக்கு வரும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டினர்.
சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடப்பாண்டு, ஜூன் 20ம் தேதி, மின்னகம் நுகர்வோர் சேவை மையம் துவக்கப்பட்டது. அந்த மையத்தில் 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தமிழகம் முழுதும் வசிப்போர், மின் தடை மட்டுமின்றி கூடுதல் மின் கட்டணம் வசூல், மீட்டர் பழுது என, மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
அங்கு பெறப்படும் புகார் கணினியில் பதிவு செய்யப்பட்டதும், புகார்தாரருக்கு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படுகிறது. புகார், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.நடவடிக்கை எடுத்த பின், புகார்தாரரை தொடர்பு கொண்டு உறுதி செய்யப்படுகிறது.
மின்னகம் துவங்கியதில் இருந்து நேற்று மாலை வரை பெறப்பட்ட புகார் எண்ணிக்கை, 5 லட்சமாக உள்ளது. அதில் 4.90 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட நிலுவையில் உள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE