பத்திரப்பதிவு பணியில் இருந்து மாவட்ட பதிவாளருக்கு விலக்கு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு பணியில் இருந்து மாவட்ட பதிவாளருக்கு விலக்கு?

Added : நவ 23, 2021
Share
சென்னை:தமிழகத்தில் 575 சார் -பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, பத்திரப்பதிவு பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில், 150க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர் நிலையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதிக பத்திரங்கள் வரும் அலுவலகம் என்றும், அதை சமாளிக்க மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள அதிகாரி தேவை என்றும் இதற்கு காரணம் கூறப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த

சென்னை:தமிழகத்தில் 575 சார் -பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, பத்திரப்பதிவு பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில், 150க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர் நிலையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதிக பத்திரங்கள் வரும் அலுவலகம் என்றும், அதை சமாளிக்க மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள அதிகாரி தேவை என்றும் இதற்கு காரணம் கூறப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில், பதிவுத் துறையில் மட்டும் மாவட்ட பதிவாளர்கள், பல இடங்களில் சார் - பதிவாளர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது.

மாவட்ட பதிவாளர்கள், பதிவு பணியில் இருக்கும் இடங்களில் தான் அதிக அளவில் லஞ்ச புகார்கள் வருவதும், சோதனைகள் நடப்பதும் தெரியவந்து உள்ளது. இதனால், மாவட்ட பதிவாளர்களை அவர்களுக்குரிய பணியில் நியமிக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுதும் சார் - பதிவாளர் அலுவலக எல்லைகள் மறுவரையறைக்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதனால், குறிப்பிட்ட சில அலுவலகங்களில் அதிக பத்திரங்கள் குவியும் நிலை மாறும்.மேலும், தவிர்க்க முடியாத நிலையில் அதிக பத்திரங்கள் வரும் அலுவலகம் என்றால், அங்கு கூடுதல் சார் - பதிவாளர்களை நியமிக்கும் நடைமுறை உள்ளது.

இந்த பின்னணியில், பதிவு பணியில் இருந்து மாவட்ட பதிவாளர்களை விடுவிக்க பதிவுத் துறை முடிவு எடுக்க உள்ளது.மேலும், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எழும் பிரச்னைகள், புகார்களை பதிவு மாவட்ட அளவிலேயே முடிக்க, நிர்வாக அமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X