நாமக்கல்: தொடர் மழை காரணமாக முட்டை விற்பனைக்கு அனுப்ப முடியாததால், பண்ணைகளில், இரண்டு நாள் உற்பத்தியான எட்டு கோடி முட்டை இருப்பு உள்ளது. அதனால், கொள்முதல் விலை, ஒரே நாளில், 15 காசு குறைக்கப்பட்டுள்ளது. நவ., 1ல் முட்டை கொள்முதல் விலை, 455 காசாக நிர்ணயிக்கப்பட்டது. 5ல், 465; 6ல், 470; 12ல், 455; 15ல், 460; 18ல், 465 என, படிப்படியாக ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. நேற்று, 15 காசு சரிந்து, 450 காசாக நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வாகனங்கள் செல்லாததால், முட்டை சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்திலும் மழை காரணமாக முட்டைகளை வெளியே அனுப்ப முடியாததால் கொள்முதல் விலையை, 15 காசு குறைத்துள்ளனர். அதனால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பண்ணைகளில் இரண்டு நாள் உற்பத்தியான, எட்டு கோடி முட்டை இருப்பு உள்ளது. கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE