தக்காளியை நாம 'வச்சு' செய்ய முடியாது; அழுகிவிடும்... அதுதான் இப்போது நம்மை 'வச்சு' செய்கிறது தக்காளி. நாமும் அழுகிறோம்...ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று வீதியில் ஆட்டம் போடும் காளி ரஜினியைப் போல, காங்., ஆட்சியானாலும், பா.ஜ., ஆட்சியானாலும் அவ்வப்போது விலையில் எகிறி எகிறி ஆட்டம் போடுவது இந்த தக்காளிக்கும், வெங்காயத்துக்கும் வாடிக்கையான வேடிக்கையாகி விட்டது. இன்னும் நினைவில் இருக்கிறது...மலை போல வீதியில் கொட்டப்பட்ட தக்காளிகளின் மீது மாடுகள் ஏறி நின்று கதகளி ஆடிய காட்சி.இப்போது தக்காளியின் நேரம்...தக்காளிச் சட்டினி, தக்காளித்தொக்கு, தக்காளி ரசம், தக்காளி சாதம், தக்காளிக் குழம்பு. தக்காளி சைடிஷ்... ''...க்காளி... கொஞ்சம் சீப்பா கிடைச்சா என்னென்னெல்லாம் பண்றீங்கடா?'' என்று முழுசாப் பழுத்த தக்காளி, மூஞ்சிக்கு நேரா கேட்பது போலவே காலங்காத்தாலே கனவு வருகிறது.ரத்தத்தைப் பார்த்து, 'என்னண்ணே தக்காளிச்சட்னியை மூஞ்சில ஊத்தி வச்சிருக்கீங்க...சிகப்பா இருக்குல்ல... இது தக்காளிச்சட்னின்னு எனக்குத் தெரியாதா?' என்று சொல்லும் போண்டா மணியிடம், 'உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளிச்சட்னியா?' என்று வடிவேலு கேட்டது, தக்காளிச் சட்டினியின் மகிமையை அகிலமெங்கும் பறைசாற்றிய அல்டிமேட் காமெடி. இப்போது அப்படியொரு சீன் வைத்தால், ''ஏன்டா கூறு கெட்ட கூகை... தக்காளிச் சட்னியை மூஞ்சில ஊத்திட்டுத் திரியுறதுக்கு நான் என்ன அம்பானியா அதானியா?'' என்று டயலாக் வைத்திருப்பார் வைகைப்புயல். இதுவும் கடந்து போகும் என்று சீரியஸ் ஆகச் சொல்வார்கள். தக்காளி விலையையும், அதை வைத்து தட்டி எடுக்கப்படும் மீம்ஸ்களையும் பார்த்தால்...மீண்டும் இதே வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. அடுத்த சில மாதங்களுக்குள்...ஆளுக்கு ஆள் தோட்டத்தில் தக்காளி போடுவார்கள். மாடித் தோட்டங்களில் மற்ற செடிகள் பிடுங்கப்படும். ஆறே மாதத்தில் மூட்டை மூட்டையாய் மார்க்கெட்டில் தக்காளி குவியும். கிலோ பத்து ரூபாய் என்று கூவிக்கூவி விற்பார்கள். அதையும் வாங்க ஆளிருக்காது.மாட்டுக்காவது கொடுப்போம் என்று கொடுத்தாலும், 'அண்ணா! ஏற்கனவே நாலு மூட்டை இருக்குண்ணா... வேண்டாங்கண்ணா' என்று சொல்லி வேண்டாமென்பார்கள். இந்த முரண் நகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் பொறுப்பு. வேளாண்மைக்குத் தனி பட்ஜெட், சிறப்பு நிதி, தனி பல்கலைக்கழகம் என்று விவசாயத்துக்கு முக்கியத்துவம் தருவதாகச் சொல்லும் அரசுகள், சந்தையின் நிலை, மக்களின் தேவை, ஒரு பயிர் பயிரிடப்படும் பரப்பு இவற்றையெல்லாம் கணித்து, விவசாயிகளுக்கு அந்தந்த நேரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு ஏன் முயற்சி எடுப்பதில்லை... இதுதான் வேளாண்துறையின் தலையாய கடமை.இதைச் செய்யாத வரையிலும், தக்காளியும் வெங்காயமும் ஒன்று தலைமேல் ஏறி நிற்கும்; இல்லையேல் தரையில் மிதிபடும். அதையெல்லாம் அரசு செய்யும் வரைக்கும் சமையலில் தக்காளிக்கு லீவு கொடுத்து விட்டு, சந்தோஷமாக இந்த மீம்ஸ்களை ரசிப்போம்...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE