சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 768 ரூபாய் சரிவடைந்தது.
சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4,613 ரூபாய்க்கும்; சவரன் 36 ஆயிரத்து 904 ரூபாய்க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி 70.90 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு 96 ரூபாய் குறைந்து, 4,517 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 768 ரூபாய் சரிவடைந்து, 36 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2.10 ரூபாய் குறைந்து, 68.80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்தில், நிபுணர்களின் கணிப்பையும் தாண்டி, தொழில் துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. உலக முதலீட்டாளர்கள், அந்நாடுகளின் தொழில் துறைகள் சார்ந்த பங்கு சந்தைகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால், இந்தியாவிலும் அதன் விலை குறைந்துள்ளது. இந்த சரிவு தற்காலிகமானது.இவ்வாறு அவர் கூறினார்.