சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலிண்டர் வெடித்து 6 வீடு தரைமட்டம்: தீயணைப்பு அதிகாரி உட்பட 5 பேர் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
சேலம்:சேலத்தில், காஸ் சிலிண்டர் வெடித்து ஆறு வீடுகள் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு நிலைய அதிகாரி, அவரது மனைவி உட்பட ஐந்து பேர் பலியாகினர்; 11 பேர் காயமடைந்தனர்.சேலம், கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் கோபி, 52; ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். கடைக்கு தேவையான வணிக காஸ் சிலிண்டர்களை தன் வீட்டில் வைத்திருந்தார். வேலை ஆட்களையும் தங்க வைத்துள்ளார். நேற்று காலை 6:30
 சிலிண்டர் வெடித்து 6 வீடு தரைமட்டம்: தீயணைப்பு அதிகாரி உட்பட 5 பேர் பலி

சேலம்:சேலத்தில், காஸ் சிலிண்டர் வெடித்து ஆறு வீடுகள் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு நிலைய அதிகாரி, அவரது மனைவி உட்பட ஐந்து பேர் பலியாகினர்; 11 பேர் காயமடைந்தனர்.
சேலம், கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் கோபி, 52; ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். கடைக்கு தேவையான வணிக காஸ் சிலிண்டர்களை தன் வீட்டில் வைத்திருந்தார். வேலை ஆட்களையும் தங்க வைத்துள்ளார். நேற்று காலை 6:30 மணிக்கு கோபியின் மாமியார் ராஜலட்சுமி, 80, காபி போட காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

சிலிண்டரில் காஸ் கசிந்து இருந்ததால், பற்ற வைத்ததும் வெடித்து சிதறியது.மீட்பு பணி இதில் கோபி வீடு, அருகில் இருந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய போக்குவரத்து பிரிவு சிறப்பு அதிகாரி பத்மநாபன், 48 மற்றும் நான்கு பேர் வீடுகள் என ஆறு வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. ராஜலட்சுமி, சம்பவ இடத்தில் பலியானார்.

இந்த விபத்தில் வீடுகளில் இருந்து பெயர்ந்த கற்கள், மற்ற வீடுகள் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தவர்கள், காய்கறி வாங்கியவர்கள், விற்றவர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் மீது விழுந்தன.காயமடைந்த 10 வயது சிறுமி உட்பட 11 பேரை போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், பொக்லைன் இயந்திரங்களுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 3:00 மணி வரை மீட்பு பணி நடந்தது.மீட்பு பணியின்போது, சரிந்து கிடந்த சிமென்ட் சிலாப்பை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றிய நிலையில், அதன் அடியில் சிக்கியிருந்த சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்தது. இதனால், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அலறியடித்து ஓடினர். பின், சிலிண்டரின் மேல் பகுதியில் சாக்கு வைத்து, வேறு இடத்துக்கு மாற்றினர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபன், 49, அவரது மனைவி தேவி, 37 மற்றும் கார்த்திக் ராம், 18, எல்லம்மாள், 90 ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.


ரூ.5 லட்சம் நிவாரணம்

இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன், ஒவ்வொருவர் குடும்பத்திற்கும், தலா 5 லட்சம் ரூபாய்; படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


பட்டாசும் வெடித்ததா?

சிலிண்டர் வெடித்து ஆறு வீடுகள் தரைமட்டமான நிலையில், சிலிண்டர் வெடித்ததால் மட்டுமே சேதம் அதிகரிக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள், போலீசார் சந்தேகப்பட்டனர். சிலிண்டர் வெடித்த நிலையில், பட்டாசும் சேர்ந்து வெடித்ததே, சேதம் அதிகரிப்புக்கு காரணம் என கூறப்பட்டது.சம்பவ இடத்தில் பட்டாசு வெடித்ததற்கான அறிகுறிகள் உள்ளதா என, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், க்யூ பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர்கார்மேகம் கூறும்போது, ''விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


அமைச்சர் எச்சரிக்கை:

சிலிண்டர் வெடித்து சேதமான வீடுகளை பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு கூறியதாவது:வீட்டில் வணிக சிலிண்டரை பயன்படுத்தி பலகாரங்கள் செய்த போது, சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் வீடுகள் சேதமாகி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்து குறித்து, முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X