ஆறுமுகசாமி கமிஷனை விரிவுபடுத்த உச்ச நீதிமன்றம் ஆலோசனை| Dinamalar

ஆறுமுகசாமி கமிஷனை விரிவுபடுத்த உச்ச நீதிமன்றம் ஆலோசனை

Added : நவ 24, 2021
Share
புதுடில்லி:'தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனில், தொழில்நுட்ப நிபுணர் அல்லது டாக்டர் மற்றும் முன்னாள் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 2016 செப்.,ல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ

புதுடில்லி:'தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனில், தொழில்நுட்ப நிபுணர் அல்லது டாக்டர் மற்றும் முன்னாள் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 2016 செப்.,ல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல், அந்தாண்டு, டிச., 5ல் உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் குழுவின் விசாரணையை எதிர்த்து, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம், 'ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்டவைகள் குறித்து புரிந்து கொள்ளும் வகையில், விசாரணைக் குழுவில் எவரும் இல்லை. இந்த விசாரணைக் குழு எங்களுக்கு எதிராக பாரபட்சமாக நடக்கிறது. அதனால், இந்த விசாரணைக் கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என, வாதிட்டார்.
அதையடுத்து, 'விசாரணை கமிஷனில், ஒரு தொழில்நுட்ப நிபுணர் அல்லது டாக்டர் மற்றும் ஒரு முன்னாள் நீதிபதியை ஏன் கூடுதலாக சேர்க்கக் கூடாது' என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவேயிடம், அமர்வு கேள்வி எழுப்பியது.'தற்போதைய சூழ்நிலையில், இந்த விசாரணைக் கமிஷனில் இணைவதற்கு நிபுணர் அல்லது டாக்டர் யாரும் முன்வர மாட்டர். அதே நேரத்தில் விசாரணை கமிஷனை விரிவுபடுத்த தமிழக அரசு தயாராக உள்ளது' என, துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X