'டாடி ஆறுமுகம்' மகன் பாரில் ரகளை: இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்:பெண்ணுடன் 'நெருக்கமாக' இருந்த படம் கணவருக்கு அனுப்பி மிரட்டியவர் கைதுசென்னை: கொருக்குப்பேட்டையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த 'போட்டோ'வை அவரது கணவருக்கு அனுப்பி, ஆசிட் வீசப் போவதாக மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரம் அவுசிங் போர்டைச் சேர்ந்தவர் பழனிசாமி, 28. இவர், வண்ணாரப்பேட்டை,
crime, murder, arrest


தமிழக நிகழ்வுகள்:


பெண்ணுடன் 'நெருக்கமாக' இருந்த படம் கணவருக்கு அனுப்பி மிரட்டியவர் கைது

சென்னை: கொருக்குப்பேட்டையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த 'போட்டோ'வை அவரது கணவருக்கு அனுப்பி, ஆசிட் வீசப் போவதாக மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரம் அவுசிங் போர்டைச் சேர்ந்தவர் பழனிசாமி, 28. இவர், வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜானகி, 24. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகர், முதல் தெருவைச் சேர்ந்த வினோத், 33, என்பவருடன் ஜானகிக்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் கணவரை விட்டு பிரிந்து, வினோத்துடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

மூன்று மாதங்கள் வாழ்ந்த நிலையில், அவரது நடவடிக்கை பிடிக்காமல், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர், தான் திருந்தி விட்டதாகக் கூறிய ஜானகி, கணவர் பழனிசாமியிடம் தஞ்சமடைந்தார். இந்நிலையில், ஜானகியுடன் நெருக்கமாக இருந்த சில 'போட்டோ'க்களை, பழனிசாமியின் மொபைல் போனுக்கு அனுப்பி, 'உன் மனைவியை என்னுடன் அனுப்பி வை' என வினோத் மிரட்டியுள்ளார். மேலும், வீட்டுக்குச் சென்று, ஜானகியின் கையைப் பிடித்து இழுத்து, 'என்னுடன் வராவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன்' என மிரட்டிஉள்ளார்.ஜானகி அளித்த புகாரின்படி, கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வினோத்தை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., அதிரடி கைது

கரூர் : வீட்டு மனைகளை முறைப்படுத்த, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 45; இவர் க.பரமத்தியில் நான்கு வீட்டு மனைகளை, தன் மனைவி பெயரில் முறைப்படுத்தி வழங்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், 45, என்பவரிடம் மனு அளித்தார்.அதற்கு குமாரவேல், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சக்திவேல், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். நேற்று மாலை சக்திவேல், க.பரமத்தி யூனியன் அலுவலகத்தில் இருந்த குமாரவேலிடம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குமாரவேலை கைது செய்தனர்.


'டாடி ஆறுமுகம்' மகன் பாரில் ரகளை

புதுச்சேரி : புதுச்சேரியில், போதையில் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய, 'யு டியூப்' பிரபலம் 'டாடி ஆறுமுகத்தின்' மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.

'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற யு டியூப் சேனல் நடத்தி வருபவர் டாடி ஆறுமுகம். தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த இவர், புதுச்சேரி காமராஜ் சாலை இந்திரா சிக்னல் பகுதியில், 'டாடி ஆறுமுகம் பிரியாணி' என்ற உணவகம் நடத்தி வருகிறார். உணவகத்தை, ஆறுமுகம் மகன் கோபிநாத், 33, கவனித்து வருகிறார். இவரது சித்தப்பா மகன் ஜெயராம், 25, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தாமு, 32; மோகன், 28; ராஜேஷ், 25 ஆகியோர் வேலை செய்கின்றனர். கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேரும் 21ம் தேதி இரவு, ஏ.கே. டார்வின் ஓட்டலுக்கு சென்றனர். அங்கு மதுபான பாரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து, குத்தாட்டம் போட்டுள்ளனர்.

ஊழியர்களை காரணமின்றி அழைத்து, மரியாதை இல்லாமல் பேசினர். இரவு 11:00 மணிக்கு பார் மூடும் நேரமானதும், கிளம்ப மறுத்து தகராறு செய்த ஐந்து பேரும், பீர் பாட்டில்களை உடைத்து தாக்கியதில் ஊழியர் ஜார்ஜஸ் சினாஸ்க்கு வலது கை, காலில் காயம் ஏற்பட்டது. பின், அவர்கள் தப்பி ஓடினர். ஜார்ஜஸ் சினாஸ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது புகார்படி முத்தியால்பேட்டை போலீசார், கோபிநாத் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில் தாமு, ஜெயராம் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர், கோபிநாத் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

பாரில் இருந்து போதையில் வெளியே வந்த கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேரும் சாலையில் நிற்க முடியாத அளவிற்கு தள்ளாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த முத்தியால்பேட்டை ஏட்டு மோகன், 'என்ன பிரச்னை' என கேட்டுள்ளார். அவரிடம், 'ஓசியில் பிரியாணி வாங்கி தின்னும் ஆட்கள், நீங்கள் என்னை எப்படி கேள்வி கேட்கலாம்' என, கூறி, ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


மாமனார், மருமகள் பலி

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை அடுத்த ஆடையூரைச் சேர்ந்தவர் மொட்டையன், 55; பழ வியாபாரி. இவரது மருமகள் கல்பனா, 25; சிறுவள்ளூர் அரசு பள்ளியில் தற்காலிக பணியாளர். நேற்று முன்தினம் மாலை, கல்பனா பணி முடிந்து வீடு திரும்பினார்.அவரை மாமனார் மொட்டையன், டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் அழைத்து வந்தார். அருணகிரிமங்கலம் பகுதியில், பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பஸ் மோதியது. சம்பவ இடத்தில் கல்பனா இறந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மொட்டையன் இறந்தார்.


புது மணப்பெண் மர்மச்சாவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், நன்செய் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். காரைக்குடியில் தேசிய வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி சவுமியா, 25. கடந்த 11ல் திருமணம் நடந்தது. கடந்த 21ம் தேதி புதுமண தம்பதி, மானுார் கிராமத்தில் உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று திரும்பினர். நள்ளிரவில் சவுமியாவிற்கு தொடர் இருமல் வந்தது. தண்ணீர் குடித்தபோது மயங்கி விழவே, அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், சவுமியா இறந்து விட்டது தெரிந்தது. சவுமியாவின் தந்தை புகார்படி, மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ஈரோடு ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.


புதுமாப்பிள்ளை பலி

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் சீனிவாசலு, 38; இவருக்கும், சென்னையைச் சேர்ந்த கனிமொழி, 32, என்பவருக்கும் கடந்த 21ல் திருமணமானது. மனைவி மற்றும் உறவினர்களுடன் சீனிவாசலு நேற்று முன்தினம் தன் ஹூண்டாய் ஐ 10 காரில், சென்னையில் உள்ள மாமனார் வீட்டுக்கு கிளம்பினார். காரை சீனிவாசலு ஓட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12:10 மணிக்கு, சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் கார் மோதியது. இடிபாடுகளில் சிக்கிய சீனிவாசலு உயிரிழந்தார். கனிமொழி படுகாயமடைந்தார். உறவினர்கள் மூவர் லேசான காயங்களுடன் தப்பினர்.


காமுக தந்தை கைது

தேனி: கணவரை இழந்த 45 வயது பெண், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நர்சாக பணியாற்றுகிறார். இவர், 47 வயது நபரை மறுமணம் செய்தார். நர்சின் 24 வயது மகள், கணவர் இறந்ததால் தாய் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தங்கினார். நவம்பர் 16ல், நர்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பின், அவர் மகளுக்கு நர்சின் இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்தார். புகாரின்படி, தேனி அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.


பாலியல் டிரைவருக்கு '20 ஆண்டு'

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சூரியகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராசு, 33; ஆட்டோ டிரைவர்.பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியை, 2016 மே 29ல் கடத்தி சென்று, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகார்படி திருச்செங்கோடு போலீசார், தங்கராசுவை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. தங்கராசுக்கு, 20 ஆண்டுகள் சிறை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.


தாய், மகன் தற்கொலை

திருப்பூர்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்தவர் நாகராஜ், 50; மனைவி ராதா, 45; மகன் நிரஞ்சன், 22; ஐ.டி., பட்டதாரி. இவர்கள், திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் விவேகானந்தர் வீதியில் வசித்து வந்தனர்.நாகராஜ், கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். ராதா பனியன் நிறுவனத்திலும், நிரஞ்சன், வீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பணியாற்றி வந்தார். நேற்று தாயும், மகனும் வீட்டின் ஒரே அறையில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நிரஞ்சன் கடிதத்தில், 'அப்பா இல்லாத உலகத்தில் வாழ விரும்பவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.


கஞ்சாவுடன் வெளிநாட்டு பெண் கைது

வானுார்: புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் அடுத்த கோட்டக்கரை கிராமத்தில் தனியார் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இங்கு, ஆரோவில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். தான்சானியா நாட்டைச் சேர்ந்த சாரா, 32 என்ற பெண் அறையில், 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. அவருடன், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கிரிஸ் என்பவர் தங்கியிருந்துள்ளார். நண்பர்களான இருவரும், அடிக்கடி கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். சாராவை கைது செய்து, கிரிசை தேடி வருகின்றனர்.


ஒயர் திருடிய இருவர் மின்சாரம் தாக்கி பலி

நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் டான் போஸ்கோ, 20; ஜான் கிறிஸ்டோபர், 33. நண்பர்களான இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆள் இல்லாத பாழடைந்த வீட்டில் ஒயர்களை திருட சென்றுள்ளனர். அங்குள்ள ஒயர்களை வெட்டி எடுத்து வந்தவர்கள், அங்கு நின்ற ஸ்டே கம்பியையும் வெட்ட முயற்சித்த போது, அது உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு, மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


வாலிபர் கொலை: இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி, 60; இவரது மருமகன் ஏழுமலை, 37. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற ஏழுமலை, செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றார். அங்கிருந்த ஏழுமலையின் மச்சான் மற்றொரு ஏழுமலை, 26, மைத்துனர் முத்துராமன், 42, ஆகியோர் மாப்பிள்ளை ஏழுமலையை தாக்கினர். படுகாயமடைந்த அவர் பலியானார். மங்கலம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


latest tamil newsதேசிய நிகழ்வுகள்:மாணவர் தற்கொலை

பெதுல்: மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டம் ஆம்தேர் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு புறப்பட்டார். சிறிது தாமதம் ஆனதால் பள்ளி செல்லும் பஸ் புறப்பட்டு விட்டது. இதனால் கவலை அடைந்த மாணவர் அழுது கொண்டே இருந்துள்ளார். பின் வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


'மாஜி' அதிகாரி மீது குற்றப்பத்திரிகை

புதுடில்லி: டில்லியின் கஞ்ச் பகுதியில் வசித்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சன்சார் சந்த், கான்பூர் தொழில் அதிபரிடம் 1.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், 2018ல் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி ஜலஜ் ஸ்ரீவத்சவா மீது சி.பி.ஐ., அதிகாரிகள் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், சன்சார் சந்தின் மனைவி அவினாஷ் கவுர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.


உலக நிகழ்வுகள்:


காங்கோவில் 12 பேர் சுட்டுக் கொலை

கின்ஷாசா: ஆப்ரிக்காவைச் சேர்ந்த காங்கோவில் உள்நாட்டு கலவரத்தால் இடம் பெயர்ந்தவர்கள், டிரோட்ரோ, டோங்கோ என்ற கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு புகுந்த கிளர்ச்சியாளர்கள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 12 பேர் உயிரிழந்தனர். டிரோட்ரோவில் உள்ள தேவாலயத்தையும் கிளர்ச்சியாளர்கள் சூறையாடினர்.


பஸ் விபத்தில் 45 பேர் பலி

சோபியா: ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயணியருடன் சென்ற பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 45 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பல்கேரிய பிரதமர் ஸ்டீபன் யானவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

கொழும்பு: இலங்கையில், திரிகோணமலை மாவட்டத்திலிருக்கும் கின்னியா மற்றும் குரின்சகேனி இடையே படகு போக்குவரத்து நடக்கிறது. இவ்வழியே, குருனன்கேனி என்ற இடத்தில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று, இப்பாலம் அருகே, 20 பயணியருடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் நீரில் மூழ்கி இறந்த ஆறு மாணவர்களின் உடல்களை மீட்டனர். உயிருக்கு போராடிய மேலும் மூன்று மாணவர்கள் உட்பட, 11 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-நவ-202121:53:36 IST Report Abuse
NicoleThomson காசு கண்ணா பின்னான்னு வருது டாடிக்கு , மவன் ஆட்டம் போடுறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X