மசாஜ் சென்டர்களால் மாமூல் குவித்த அதிகாரிகள்; அனுமதியின்றி 5,000க்கும் மேல் இருப்பது அம்பலம்| Dinamalar

தமிழ்நாடு

மசாஜ் சென்டர்களால் 'மாமூல்' குவித்த அதிகாரிகள்; அனுமதியின்றி 5,000க்கும் மேல் இருப்பது அம்பலம்

Added : நவ 24, 2021
Share
சென்னை மாநகராட்சி பகுதியில், 200 மசாஜ் சென்டர், ஸ்பா, பியூட்டி பார்லர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 5,000க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள், சட்ட விரோதமாக செயல்படுவது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் குற்றங்களுக்கும், கலாசார சீரழிவிற்கும் காரணமாக அமைந்துள்ள இதுபோன்ற சட்டவிரோத மசாஜ் சென்டர்களை களையெடுக்க வேண்டும் என, கோரிக்கைசென்னை மாநகராட்சி பகுதியில், 200 மசாஜ் சென்டர், ஸ்பா, பியூட்டி பார்லர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 5,000க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள், சட்ட விரோதமாக செயல்படுவது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாலியல் குற்றங்களுக்கும், கலாசார சீரழிவிற்கும் காரணமாக அமைந்துள்ள இதுபோன்ற சட்டவிரோத மசாஜ் சென்டர்களை களையெடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியில், ஸ்பா, மசாஜ் சென்டர்கள், பியூட்டி பார்லர் உள்ளிட்ட தொழில்கள் அனைத்தும், முடி திருத்தும் நிலையம் என்ற பெயரிலேயே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதில், தனியாக மசாஜ் சென்டர்களுக்கு, எவ்வித விதிகளும் வகுக்கப்படாததால், அங்கு பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சட்டவிரோத பாலியல் தொழில்கள் அரங்கேறி வருகின்றன.பொது அமைதி மற்றும் ஒழுங்கு நெறிகள் காக்கும் வகையில் செயல்படும் மசாஜ் சென்டர், பியூட்டி பார்லர், ஸ்பா போன்றவைகளுக்கு தொழில் உரிமம் வழங்க வேண்டும் என, சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

இதைத் தொடர்ந்து, இவற்றை முறைப்படுத்தி அனுமதி பெறுவதற்கான விதிகளை, சென்னை மாநகராட்சி 2019ல் வகுத்தது. இந்த தொழில்களுக்கு தொழில் உரிமம் வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தில் திருத்தம் செய்து, அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பின் படி, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, அக்குபஞ்சர் தெரபி உள்ளிட்ட படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து, முறையான பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, இதுபோன்ற சென்டர்கள் நடத்த அனுமதி வழங்கப்படும்.காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மட்டுமே நிலையங்கள் செயல்பட வேண்டும். வேலை நேரத்தில் கடையின் முதன்மை கதவு திறந்து தான் இருக்க வேண்டும். கதவுகளை மூடிவிட்டு, எந்தவித பணிகளையும் செய்யக்கூடாது. அனைத்து அறைகளிலும், போதுமான விளக்குகளை அமைக்க வேண்டும். நிலையத்தின் உள்ளே 'சிசிடிவி கேமரா' அமைக்கப்படுவதுடன், நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன.மசாஜ் சென்டர், ஸ்பா, பியூட்டி பார்லர் ஆகிய தொழில்களுக்கு உரிமம் பெற விரும்புபவர்கள், மாநகராட்சியின் மண்டல உதவி சுகாதார அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைத்தில், தடையில்லா சான்று பெற்று, மாநகராட்சியின் வருவாய் துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடந்த 2019 ஏப்., 1ம் தேதி முதல், இந்த தொழிலுக்கு, மாநகராட்சி தொழில் உரிமம் வழங்கும் நடைமுறைகள் துவங்கப்பட்டன. ஆனால், இதுவரை 200 சென்டர்கள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன. அதே வேளையில், குடியிருப்புகள், மால்கள், ஓட்டல்கள், ரிசாட்கள் உள்ளிட்ட 5,000 இடங்களில், சட்டவிரோத மசாஜ், ஸ்பா, பியூட்டி பார்லர்கள் இயங்கி வருவது, சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இந்த மசாஜ் சென்டர்கள் மீது எழும் தொடர் புகாரை தொடர்ந்து,

சென்னை காவல் துறை நேற்று முன்தினம் 151 இடங்களில் சோதனை நடத்தி, 63 சென்டர்களை மூடி 'சீல்' வைத்தனர். ஆனால், மாநகர் முழுதும் ஏராளமான சென்டர்கள் சட்டவிரோதமாக, அந்தந்த உள்ளூர் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளின் ஆதரவில் தொடர்ந்து இயங்கி வருகிறது.குறிப்பாக, சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதி மண்டலங்களில், வீடுகளை வாடகைக்கு பிடித்து, பெயர் பலகை ஏதும் வைக்காமல், மசாஜ் சென்டர்களை நடத்தி வருகின்றனர்.இங்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்து செல்வர். இதுபோன்ற இடங்களில், மசாஜ் என்பதை காட்டிலும், பாலியல் தொழிலே பிரதானமாக நடக்கிறது.இம்மையங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள், மாநகராட்சி அலுவலகங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மாமூல் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.தற்போது காவல் துறை ரெய்டு நடத்தியது, குறிப்பிட்ட மசாஜ் சென்டர்களை குறி வைத்து தானே தவிர, சட்டவிரோதமாக செயல்படும் ஏராளமான சென்டர்களை, காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை.

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, இந்த மசாஜ் சென்டர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.தொழில் உரிம கட்டணம் எவ்வளவு?நிலையங்கள் அளவை பொறுத்து உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது.அதன்படி, தடுப்பு அறை மற்றும் குளிர்சாதன வசதியற்ற முடி திருத்தும் நிலையங்களுக்கு 200 ரூபாய்; குளிர்சாதன வசதி கொண்ட முடி திருத்தும் நிலையம் மற்றும் அழகு நிலையத்திற்கு 500 ரூபாய் தொழில் உரிம கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மசாஜ் சென்டர், ஸ்பா, பியூட்டி பார்லர்களுக்கு, தடுப்பு அறை மற்றும் குளியல் வசதிகள் உடையவைகளுக்கு, 500 சதுர அடிக்கு 2,500 ரூபாய்; 501 முதல் 1,000 சதுர அடி வரை 5,000 ரூபாய்; 1,000 சதுர அடிக்கு மேல், 7,500 ரூபாயாக ஆண்டு தொழில் உரிம கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு!சென்னை மற்றும் புறநகரில் செயல்படும் மசாஜ் சென்டர்களில், வட மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை அதிகளவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த இளம்பெண்களை, மசாஜ் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் புரோக்கர் கும்பல் ஈடுபடுவதாகவும், அரசியல் புள்ளிகள் சிலருக்கு இதில் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரித்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X