மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைக்காரர்களுக்கு பழைய சென்ட்ரல் மார்க்கெட் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைக்காரர்கள் சங்கம் தலைவர் ராஜூநாகுலு தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரியமாக கடைகள் நடத்துகிறோம். மஞ்சள், குங்குமம், பூஜை பொருட்கள் விற்பனை செய்கிறோம். கோயில் கிழக்கு கோபுர பகுதியில் 2018 பிப்.,2 ல் தீ விபத்து ஏற்பட்டது. சில கடைகள் சேதமடைந்தன. கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் முயற்சி செய்தது. கடைகளை காலி செய்யும் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
கோயில் வளாகத்தில் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கக்கோரி நிர்வாகத்திடம் மனு அளித்தோம். மாற்று இடம் இல்லை என பதில் அளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை செயலாளர், மதுரை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் பணி நடக்கிறது. பணி முடிந்த பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என 2020 ல் கமிஷனர் உத்தரவிட்டார்.
அங்கு கடைகள் ஒதுக்கீட்டிற்கு நவ.,10 ல் மாநகராட்சி ஏல அறிவிப்பு வெளியிட்டது. இது சட்டவிரோதம். எங்களுக்கு இழப்பு ஏற்படும்.ஏல அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பழைய சென்ட்ரல் மார்க்கெட் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜூநாகுலு குறிப்பிட்டார்.நீதிபதி சி.வி.கார்த்தி கேயன் இன்று (நவ.,24) ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE