கோவைக்கு முதல்வர் வருகையையொட்டி, மூன்று நாட்களாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால், 'சீல்' வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில் இருந்து லாரி லாரியாக செங்கல் கடத்தப்பட்டுள்ளது.
கோவை அருகே உள்ள தடாகம் பகுதியில், அனுமதியின்றியும், விதிகளை மீறியும் இயங்கி வந்த 197 செங்கல் சூளைகள், ஐகோர்ட் உத்தரவின்படி, கடந்த மார்ச்சில் மாவட்ட நிர்வாகத்தால் 'சீல்' வைக்கப்பட்டன. தேசிய பசுமை தீர்ப்பாயமும், இந்த சூளைகளுக்கு எதிராகக் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், செங்கல் சூளைகளுக்கான விதிமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து, மீண்டும் திறப்பதற்கு தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஆளும்கட்சியினர் ஆதரவாக இருந்து வந்தனர்.ஆட்சி மாற்றத்துக்குப் பின், தி.மு.க.,மாவட்டப் பொறுப்பாளர்கள் இருவர் துணையுடன், இதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.இது ஒரு புறமிருக்க, 'சீல்' வைக்கப்பட்ட செங்கல் சூளைகளிலிருந்து, எந்தப் பொருளையும் வெளியே கொண்டு செல்லக்கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவை மீறி, பொருட்கள் கடத்தப்படுகின்றன.கோவை வடக்கு தாலுகா அலுவலர்கள், தடாகம் உள்ளிட்ட ஐந்து கிராம ஊராட்சிகளின் வருவாய்த்துறை ஊழியர்கள், தடாகம் போலீசார் ஒத்துழைப்புடன் இந்த வேலை நடக்கிறது.
குறிப்பாக, 'சீல்' வைப்பதற்கு முன்பு தயார் நிலையில் இருந்த செங்கல் அனைத்தும் லாரி லாரியாக இரவில் கடத்தப்படுகின்றன.தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு லாரிக்கு இரண்டாயிரம் வீதம் மாமூல் வாங்கிக்கொண்டு இவற்றை அனுமதிக்கின்றனர். ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாரும் தங்கள் பங்கிற்கு வாங்கிக் கொள்கின்றனர். இவற்றைத் தடுக்க வேண்டிய கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அனைவரும், ஆளும்கட்சியின் அரசியல் அழுத்தத்துக்கு பயந்து கண்டுகொள்ளாமல் உள்ளனர்.கடந்த சில நாட்களாக இரவுதோறும் லாரிகளில் செங்கல் கடத்தப்படுவாக புகார் எழுந்துள்ளது. அதிலும், கோவையில் தமிழக முதல்வர் வருகையையொட்டிய பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார், நகருக்குள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த மூன்று நாட்களும் இரவு முழுவதும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கல் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த திங்கள்கிழமை அதிகாலை, லாரியில் செங்கல் கடத்தும்போது, அதைத் தடுத்த வனத்துறையின் வாகனத்தின் மீது மோதியுள்ளனர். அதில் வேட்டை தடுப்புக்காவலர் ஒருவரும் காயமடைந்துள்ளார். வனத்துறையினர் துரத்திப்பிடித்து, அந்த லாரியை தடாகம் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.அந்த செங்கல் லாரியை சட்டவிரோதமாக மீட்பதற்கு, ஆளும்கட்சியினரைக் கொண்டு செங்கல் சூளை உரிமையாளர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.முதல்வர் இருக்கும் நாளிலேயே இப்படி சட்டவிரோதமாக செங்கல் கடத்தியதுடன், அரசு வாகனத்தையும் மோதி விட்டுச் சென்றிருப்பது, இவர்களுக்கு இந்த அரசின் மீதும், சட்டத்தின் மீதும் துளியும் பயமில்லை என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
சமீபத்தில்தான், திருச்சியில் ஆடு திருடர்களால் எஸ்.எஸ்.ஐ., கொல்லப்பட்டுள்ளார்; கரூரில் வாகன சோதனையின் போது, வாகனம் மோதி மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக செங்கல் கடத்தும் லாரிகளால், வனத்துறையினருக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதுவும் அரசுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கும். எனவே, இனியாவது இதுபோன்று 'சீல்' வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில் இருந்து லாரிகளில் செங்கல் கடத்தும் நபர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டியது கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யின் பொறுப்பு.இல்லாவிடில் நடக்கும் விதிமீறல், விபரீதங்களுக்கும் இவர்களே கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

கூண்டோடு மாற்ற வேண்டும்!
தடாகம் போலீஸ் ஸ்டேஷன் புதிதாகத் துவக்கப்பட்டதிலிருந்து, அங்குள்ள போலீசாருக்கு பணம் காய்க்கும் மரமாக இந்த செங்கல் சூளைகள் இருக்கின்றன. முன்பு லாரிக்கு 100, 200 என்று மாமூல் வாங்கிக் கொண்டு இருந்த தடாகம் போலீசார், இப்போது 'சீல்' வைக்கப்பட்ட சூளைகளிலிருந்து, சட்டவிரோதமாக செங்கல் கடத்துவதால், ஒரு டிரிப்புக்கு 2000 ரூபாய் வாங்குகின்றனர்; மாமூல் கொட்டுகிறது.ரோந்துப் பணியில் உள்ள போலீசாரில் ஒருவருக்கே செங்கல் சூளை இருப்பதால், அவருடைய ஏற்பாட்டின்பேரில்தான், லாரிகள் அமோகமாக செங்கல் கடத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் அனைவரையும் கூண்டோடு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE