சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேச்சு: தமிழகத்தில் பலத்த மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இடங்களை மத்திய குழு பார்வையிட்டு வருகிறது. வழக்கமாக நீண்ட தாமதத்திற்கு பிறகு நிவாரண தொகை வழங்கப்படும். அப்படியின்றி உடனடியாக நிவாரண தொகை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை தான். வெள்ளம் வந்து நான்கைந்து நாட்கள் கழித்து வரும் மத்திய குழு, நான்கைந்து நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, அதன் பின் டில்லி சென்று, அறிக்கை அளித்து, அப்படியே ஒரு மாதத்திற்கு பின் தான் நிவாரணம் கிடைக்கிறது. இந்நிலை மாற வேண்டும்!
தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் அறிக்கை: தற்போது சென்னையில், 1 கிலோ வெங்காயம், 100 - 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளிடம் வாங்கும் விலை, கிலோவுக்கு 9 ரூபாய் மட்டுமே. 9 ரூபாய்க்கு வாங்கி, 100 - 120 ரூபாய்க்கு விற்கும் புரோக்கர்களுக்கு வாழ்த்துகள்.
விலையேற்றத்திற்கு காரணம், விவசாயிகள் இல்லை. பதுக்கல்காரர்களும், புரோக்கர்களும் தான் என்பது தெளிவாகிறது. அவர்களுக்கு ஆதரவாகத் தான், டில்லி அருகே ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: சூழலியல் மீது பெரும் அக்கறையுடன் செயல்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மறைமுக அரசியல் அழுத்தம் கொடுத்து இடமாற்றும் முடிவை, தி.மு.க., அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
கலெக்டர் மாற்றத்திற்கு கூட குரல் கொடுக்கத் துவங்கி விட்டீர்களே. அப்படியானால், உதவியாளர்கள் மற்றும் 'அட்மின்'கள் பலரை கூடுதலாக நியமித்துள்ளீர்களா...
மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தின் பல நகரங்களில் பள்ளி மாணவியர் மீது பாலியல் அத்துமீறல் தொடர்கிறது. பாதிக்கப்படும் மாணவியர் எளிதாக புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

புகார் அளவுக்கு கூட செல்லக் கூடாது. ஒவ்வொரு பள்ளியிலும் அதற்கான குழு தினமும் கூடி, ஏதேனும் அத்துமீறல் நடக்கிறதா என்பதை ஆராய வேண்டும்; ரகசியமாக கண்காணிக்க வேண்டும். அறிக்கையை ரகசியமாக மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் அறிக்கை: சேலத்தில், 300 ஆண்டுகள் பழமையான பனங்காட்டு முனியப்பன், பெரியாண்டிச்சி அம்மன், வீரமாத்தி அம்மன் கோவில்களை அகற்றிவிட்டு சமத்துவபுரம் கட்ட அரசு மேற்கொண்ட முயற்சி இந்து முன்னணி எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
விட்டால், கோவில்களை தகர்த்து, சமத்துவபுரம் கட்டி விடுவர் போலிருக்கிறதே. கிராம மட்டத்தில் ஹிந்து முன்னணி வலுவாக இருப்பது, உங்கள் அமைப்பின் செயல் வேகம் மூலம் தெளிவாகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE