உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் குற்றவாளிகளை சுட்டுத்தள்ளுங்க: துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் குற்றவாளிகளை சுட்டுத்தள்ளுங்க': துப்பாக்கியுடன் செல்ல போலீசாருக்கு அறிவுரை

Added : நவ 24, 2021
Share
திருச்சி: ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட, திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி., சைலேந்திர பாபு, ''ரோந்து பணியின் போது போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், குற்றவாளிகளை சுட்டுத்தள்ள சட்டம் அனுமதி அளித்துள்ளது,'' என தெரிவித்தார்.திருச்சி

திருச்சி: ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட, திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி., சைலேந்திர பாபு, ''ரோந்து பணியின் போது போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், குற்றவாளிகளை சுட்டுத்தள்ள சட்டம் அனுமதி அளித்துள்ளது,'' என தெரிவித்தார்.


திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன், 56. இவர், இரு தினங்களுக்கு முன், இரவு ரோந்து பணியின் போது, அதிகாலை 1:00 மணியளவில், ஆடு திருடும் கும்பலை துரத்திப் பிடித்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே, பள்ளத்துப்பட்டி ரயில்வே பாலம் அருகே, ஆடு திருடும் கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் விசாரித்து, தஞ்சாவூர் மாவட்டம், தோகூரைச் சேர்ந்த மணிகண்டன், 19 மற்றும் 9 - 14 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்தனர். இச்சம்பவத்தின் போது, தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., சைலேந்திர பாபு, உ.பி., மாநிலம், லக்னோவில், பிரதமர் மோடி பங்கேற்ற டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் இருந்தார். இதனால், சம்பவ இடத்திற்கு உடனே வர முடியவில்லை. எனினும் அவருக்கு, பூமிநாதன் படுகொலை மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது என, அனைத்து விபரங்களையும் மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தெரிவித்த வண்ணம் இருந்தார். டி.ஜி.பி.,க்கள் மாநாடு முடிந்து தமிழகம் திரும்பிய சைலேந்திர பாபு, நேற்று காலை திருச்சி சென்றார். நவல்பட்டு அருகே, சோழமாநகர் என்ற இடத்தில் உள்ள பூமிநாதன் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பூமிநாதன் மனைவி கவிதா, மகன் குகன் பிரசாத் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

பின், அவர் அளித்த பேட்டி: எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் திருடர்களை பிடிக்க சென்று வீரமரணம் அடைந்துள்ளார். அவர் தமிழக முதல்வரின் பதக்கம் பெற்றுள்ளார். பயங்கரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சியும் பெற்றுள்ளார். நள்ளிரவிலும், 15 கி.மீ., தூரம் ஆடு திருடர்களை விரட்டி சென்றதோடு, அவர்களை பிடித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, சட்டப்படி, அதே நேரத்தில் பாதுகாப்புடன் நடந்துள்ளார். மொபைல் போன் வாயிலாக, பிடிபட்ட நபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசியுள்ளார். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் தாயிடமும் பேசி, காலையில் போலீஸ் ஸ்டேஷன் வருமாறு கூறி உள்ளார். வீரம், வேகம், விவேகம் மற்றும் சட்டப்படி பூமிநாதன் செயல்பட்டுள்ளார். அவர், சற்றும் எதிர்பாராத நிலையில், பிடிபட்ட மணிகண்டன் உள்ளிட்டோரால் உயிர் பறிக்கப்பட்டு வீரமரணம் அடைந்துள்ளார். காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது புதிதல்ல. அவற்றை முறியடித்து வருகிறோம். அதுபோன்ற நேரங்களில் உயிர் தியாகமும் நிகழ்ந்து விடுகிறது. அதுவும் நாங்கள் நேசிக்கும் சிறுவர்கள் இந்த பாதகச் செயலை செய்தனர் என்பதை தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பூமிநாதன் குடும்பத்தாருக்கு முதல்வர், தன் நிவாரண நிதியில் இருந்து, 1 கோடி ரூபாய் அறிவித்துள்ளார். மேலும், பூமிநாதன் மகனுக்கு வாரிசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளதற்கும் முதல்வருக்கு காவல் துறை சார்பில் நெஞ்சார்ந்த நன்றி. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, இரு மாதங்களாக, காவல் துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆயுத பயிற்சி, கைத்துப்பாக்கி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்படும். ரோந்து பணியின் போது போலீசார், ஆறு தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள், தங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது, போலீசார் ஆயுத பிரயோகம் செய்ய சட்டம் அனுமதி அளித்துள்ளது. போலீசார் சட்டத்தை மதித்து, ஆபத்தான நேரங்களில் குற்றவாளிகள் மீது, துப்பாக்கிகளை பயன்படுத்த தயங்கக் கூடாது. பூமிநாதன் படுகொலை சம்பவத்தின் போது, மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளான். சிறுவர்கள் மது அருந்தவில்லை. ஆதாரத்தின் அடிப்படையில் தான், மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் பூமிநாதனை படுகொலை செய்தனர் என்பதற்கு, 100 சதவீத ஆதாரங்கள் உள்ளன. 'வீடியோ' ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, குற்றவாளிகள் கைது விஷயத்தில் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X