பிரேசிலியா: தன்னை தானே திருமணம் செய்த பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி, 90 நாளில் தன்னை தானே விவாகரத்து செய்துள்ள நிகழ்வு கேலிக்கூத்தாகியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகி கிரிஸ் கலேரா. 33 வயதான இவர் மாடலிங் துறையில் அந்நாட்டில் பிரபலமாக இருந்து வருகிறார். கடந்த காலங்களில் ஏற்பட்ட காதல் முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என தீர்மானித்த அவர், தன்னை தானே திருமணம் செய்யும் முடிவை எடுத்திருக்கிறார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கிரிஸ் கலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து 90 நாட்களே ஆன நிலையில், இப்போது தன்னை தானே விவாகரத்து செய்வதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், 'எனக்கு தற்போது மீண்டும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது. நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துள்ளேன். அதற்கு பிறகு தான் இந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் வந்தது. ஆகவே நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன். இருப்பினும் ன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது,' எனக் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.