துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 24, 2021
Share
Advertisement
மாணவர்களுக்கு சீருடை வழங்கல்அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், ஒன்று முதல், 8 ம் வகுப்பு வரை, சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு இலவச வண்ணச் சீருடை வழங்கப்படுகிறது.குறிப்பாக, ஒவ்வொரு கல்வியாண்டும், ஒரு மாணவருக்கு, 4 செட் இலவச வண்ணச் சீருடைகள் வழங்கப்படுகிறது. தற்போது, உடுமலை கல்வி மாவட்ட அரசு துவக்க

மாணவர்களுக்கு சீருடை வழங்கல்அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், ஒன்று முதல், 8 ம் வகுப்பு வரை, சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு இலவச வண்ணச் சீருடை வழங்கப்படுகிறது.குறிப்பாக, ஒவ்வொரு கல்வியாண்டும், ஒரு மாணவருக்கு, 4 செட் இலவச வண்ணச் சீருடைகள் வழங்கப்படுகிறது. தற்போது, உடுமலை கல்வி மாவட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சீருடை வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, வண்ணச் சீருடைகள் தருவிக்கப்பட்டு, பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆசிரியர்கள் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மொத்தம், 118 பள்ளிகளில், 9 ஆயிரம் மாணவ, மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில், 80 சதவீதம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன் மற்றும் பிரிட்டோ கூறுகையில், 'ஏற்கனவே, மாணவ, மாணவியருக்கு முதல் 'செட்' சீருடை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 2ம் செட் சீருடை வழங்கப்படுகிறது. மூன்றாவது செட் சீருடையும் தருவிக்கப்பட்டுள்ள நிலையில், டிச., மாதம் இரண்டாவது வாரத்தில் வழங்கப்படும்,' என்றனர்.
கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பு
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, 7 ஆயிரம் ஏக்கர், வரை பாசன வசதி பெறுகிறது. பாசனத்துக்கு, மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பாசனப்பகுதியில், தொடர் மழை காரணமாக, விளைநிலங்களில், தண்ணீர் வடியாமல், தேங்கியுள்ளது. அதிக ஈரம் காரணமாக, பயிர்கள் பாதிக்குமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.இந்நிலையில், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து பூசாரிபட்டி ஷட்டர் வாயிலாக, நேற்று காலை, புதுப்பாளையம் கிளை கால்வாயில், இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே, விளைநிலங்களில், அதிக ஈரம் உள்ள நிலையில், பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரை யாரும் பயன்படுத்த முடியாது; இதனால், தண்ணீர் திறப்பை சில நாட்கள் தள்ளிப்போட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. எனவே, விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், குளங்களுக்கு தண்ணீர் திறக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை விசாரணைவால்பாறை அடுத்துள்ளது ைஹபாரஸ்ட் எஸ்டேட். இங்கு தொழிலாளர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, 278 பேருக்கு பணப்பலன்கள் வழங்காமல் எஸ்டேட் நிர்வாகம் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தது.இது குறித்து, தொழற்சங்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அபய்மனோகர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், தொழிலாளர் வைப்பு நிதி அலுவலர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள், பணப்பலன் வழங்குவது குறித்து தொழிலாளர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர்.வழங்கு தொடர்ந்த தொழிற்சங்க தலைவர் அருணகிரிபாண்டியன் கூறுகையில், ''ைஹபாரஸ்ட் எஸ்டேட்டில் பணி ஓய்வு பெற்ற, 38 தொழிலாளர்கள் பணப்பலன்கள் பெறாமலேயே உயிரிழந்துள்ளனர். எனவே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை உடனடியாக எஸ்டேட் நிர்வாகம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
'நீட்' வெற்றி; மாணவிக்கு பரிசுவால்பாறை துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவி சந்தியா, 'நீட்' தேர்வு எழுதி, வெற்றி பெற்றார். பள்ளி ஆசிரியர்கள் சாலினி, ஜோசி, சித்ராதேவி ஆகியோர், 'நீட்' தேர்வுக்கு படித்த மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.ஆசிரியர்களின் ஊக்குவிப்பால், மாணவிகள் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். மாணவியின் பெற்றோர் எஸ்டேட்டில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சந்தியாவை, பள்ளி தலைமை ஆசிரியர் மோனிகா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.மாணவி சந்தியா கூறுகையில், ''நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பால், தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். கவுன்சிலிங்கில் 'சீட்' கிடைத்தால், டாக்டராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன்,'' என்றார்.
அடிப்படை வசதிகள் இல்லீங்க!ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குசுவாமி கோவில் வீதி மற்றும் அசோக்நகர் பகுதியில், 120க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தார் ரோடு அமைக்கப்படாமல், மண் ரோடாக உள்ளது. அதேபோல், சாக்கடை கால்வாயும் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. மழை காலங்களில், ரோட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால், மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கான்கிரீட் ரோடு அல்லது தார் ரோடு மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென, இப்பகுதி மக்கள், 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.ஒடையகுளம் பேரூராட்சி அதிகாரிகள், இப்பகுதியில் ரோடு மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, மக்கள் தெரிவித்தனர்.ரேஷன் கடை கட்டடம் சேதம்மடத்துக்குளம் தாலுகா வேடப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைக்கப்பட்ட ஐ.பி.,110 ரேஷன் கடை அரியநாச்சிபாளையத்தில் செயல்படுகிறது.இந்த கடை செயல்படும் கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி மேல் தளத்தில், தேங்கி உள்ளதோடு, உட்புறம் கசிகிறது.இதனால் மூட்டை மற்றும் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குடிமைபொருட்கள் நீரில் நனைந்து வீணாகிறது. இது தவிர இந்த கட்டடத்தின் சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.பொதுமக்கள் கூறுகையில், 'சேதமான இந்த ரேஷன் கடைக்கு வருவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு தீர்வாக இந்த கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வதோடு, பராமரிப்பும் செய்ய வேண்டும்' என்றனர்.பாலம் அருகே டிவைடர் தேவைகோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் எல்லையும், மடத்துக்குளத்தின் நுழைவாயிலில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது.மதுரை உட்பட தென்மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மடத்துக்குளம் வழியாக, கோவை, பொள்ளாச்சி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன.ஆற்றுப்பாலம் பகுதியில், வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே இப்பகுதியில், வேகமாக வரும் வாகனங்களை கண்காணிப்பதோடு, டிவைடர் வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் விபத்துகள் இன்றி மக்கள் பயணிக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.பள்ளி மாணவருக்கு நிதி உதவிபொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் கோகுலகிருஷ்ணன், கடந்த, இரண்டு மாதத்துக்கு முன், கோவாவில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.இவர், நேபாலில் நடக்கும் சர்வதேச அளவிலான யோகா போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த மாணவர், நேபால் செல்வதற்கு முன்னாள் மாணவர்கள் நிதி உதவி வழங்கி உள்ளனர்.கடந்த, 1986ம் ஆண்டு படித்த மாணவர்கள் நடத்தும், 'பொள்ளாச்சி பார்வார்டு டிரஸ்ட்' என்ற அமைப்பின் சார்பில், 20 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.தலைமை ஆசிரியர் முருகேஷ், மூத்த ஆசிரியர் குழந்தைவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், புனிதன் அந்தோணிசாமி, சுகணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவரின் தந்தை கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். தாயார் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த மாணவர் ஒவ்வொரு முறையும் போட்டிக்கு செல்லும் போது தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் நிதி உதவி வழங்கி வந்தனர். தற்போது, முன்னாள் மாணவர்கள் உதவியது மகிழ்ச்சியாக உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X