சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இதுக்கு பெயர் தான் 'விடியலா?'

Added : நவ 24, 2021
Share
Advertisement
இதுக்கு பெயர் தான் 'விடியலா?'எஸ்.மகேஷ், குளச்சல், குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குற்றவாளிகளில் பல்வேறு வகை உண்டு. வழிப்பறி திருடன், வீடு புகுந்து கொள்ளையடிப்பவன், செயின் பறிப்பவன், நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து பொருட்களை களவாடுவோர், அடிதடியில் ஈடுபடுவோர் என பல வகையினர் உண்டு.இவர்களை தவிர, கூலிக்கு கொலை செய்வோர், போதைப் பொருள்


இதுக்கு பெயர் தான் 'விடியலா?'எஸ்.மகேஷ், குளச்சல், குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குற்றவாளிகளில் பல்வேறு வகை உண்டு. வழிப்பறி திருடன், வீடு புகுந்து கொள்ளையடிப்பவன், செயின் பறிப்பவன், நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து பொருட்களை களவாடுவோர், அடிதடியில் ஈடுபடுவோர் என பல வகையினர் உண்டு.
இவர்களை தவிர, கூலிக்கு கொலை செய்வோர், போதைப் பொருள் கடத்துவோர், கனிமவள கொள்ளையர் என, அதி தீவிர குற்றவாளிகளும் உண்டு.போதைப் பொருள் கடத்தல் கும்பலும், கனிமவள கொள்ளையரும் கொலை செய்வதற்கு கூட அஞ்சாதோர். இவர்களால், 100க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.பொதுவாக கோழி, ஆடு, மாடு திருடுவோர் கொலை செய்ய துணிய மாட்டார்கள்; பொதுமக்களிடம் சிக்கினால், அடி வாங்கி கொள்வர்.ஆனால், அந்த வரலாற்றையே சிதைக்கும் வண்ணம் ஒரு சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் நடந்துள்ளது.சிலர், இருசக்கர வாகனத்தில் ஆடுகளை திருடி செல்வதை கண்ட, திருச்சி
மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனை, அந்த கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது.தி.மு.க., ஆட்சியில், ஆடு திருடும் கும்பலே, கொலை வெறியோடு களம் இறங்கியுள்ளது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த ஆட்சி, நம்மை ஒன்றும் செய்யாது என்ற தைரியம், அவர்களுக்கு முளைத்து
விட்டதா?போகிற வேகத்தைப் பார்த்தால் கோழி திருடுவோர், வழிப்பறி திருடர்களும் கூட, கையில் அரிவாளோடு இறங்கி, கொலை முயற்சியில் ஈடுபடுவரோ?
தமிழகத்துக்கு நல்ல 'விடியல்' கிடைச்சுருக்கு சாமி!


தனியார் பள்ளியில் ஆய்வு நடக்கிறதா?எஸ்.கே.சவுந்தரராஜன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் 37 ஆயிரத்து 459 அரசு பள்ளிகளும், 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து 918 தனியார் பள்ளிகளும் உள்ளன.மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், அரசு பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வு நடத்துகின்றனர். மாணவ - மாணவியரிடம் நிறை, குறைகளை கேட்கின்றனர்.ஆனால், தனியார் பள்ளிகளில் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை. அங்கு பயிலும் மாணவ - மாணவியரை அரசு கண்காணிக்கிறதா என்றும் தெரியவில்லை.தனியார் பள்ளியில் தான் தரமான கல்வி போதிக்கப்படுகிறது என்ற எண்ணம் பெற்றோரிடம் உள்ளது.எவ்வளவு பணம் செலவழித்தாவது, தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். அதனால் தான், தனியார் பள்ளி நிர்வாகங்கள், மிகுந்த கெடுபிடியுடன் செயல்படுகின்றன.
அரசு பள்ளியில் மாணவியருக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள், வெளியே தெரிந்து விடுகின்றன. ஆனால், தனியார் பள்ளியில் நடக்கும் விஷயங்கள், மூடி மறைக்கப்படுகின்றன. பணம், அதிகாரத்தை பயன்படுத்தி, தனியார் பள்ளி நிர்வாகம் தப்பித்து விடுகிறது.
தனியார் பள்ளிகளிலும், மாவட்ட கல்வி நிர்வாக அதிகாரிகள், பெண் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு நடத்த வேண்டும்.மாணவியரின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு அரசு பொறுப்பேற்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்கள் வெளிச்சத்திற்கு வரும்.


வாகன புகையை குறைப்போம்!எஸ்.சந்தான ராகவன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தலைநகர் டில்லி, புகை நச்சு மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. பொது ஊரடங்கு அறிவிக்கும் அளவிற்கு காற்று மாசு அடைந்துள்ளது; பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டில்லியில் காற்றின் மாசை குறைக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.வாகனங்கள் வெளியிடும் புகையால், 72 சதவீதம் காற்று மாசுபடுகிறது. சென்னை மாநகரத்தில் காற்று மிக விரைவாக மாசுபட்டு வருகிறது.
டில்லியில் கையாளுவது போல், 'கார் பூலிங்' முறையை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும். நான்கு பேரை சுமந்து செல்ல வேண்டிய காரில், ஒருவர் மட்டும் செல்கிறார்; பலர் தனித்தனியாக தங்கள் காரில் அலுவலகங்களுக்கு சென்று
வருகின்றனர். இதனால் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகிறது; புகை அளவும் அதிகரிக்கிறது. கார் பூலிங் முறையை செயல்படுத்தினால், வாகனங்களின் எண்ணிக்கை குறையும். ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஊழியர், மாணவர்களை இறக்கிய பின் காலியாக தான் திரும்புகின்றன.
அவை, அப்பகுதியில் இருக்கும் தொழிலாளர்களை அழைத்து வரலாம். 'சிக்னல்'களில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் சூழல் வந்தால், வாகனத்தின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.வாகன புகையை குறைப்போம்; சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!


நோயின் பிடியில் செங்காடு!பொன்.சம்பந்தம், ஈக்காடு, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்'கடிதம்: திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்டங்களின் எல்லையில் உள்ளது, செங்காடு கிராமம். வளமான செம்மண் பூமியான இங்கு, தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
செங்காடு கிராமத்தில் 2,000 மக்கள் வசிக்கின்றனர். மருத்துவப் பரிசோதனையில், ஒரே தெருவைச் சேர்ந்த எட்டு நபர்களுக்கு சிறுநீரகம் செயல் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அக்கிராமம் முழுதும் நடத்தப்பட்ட மருத்துவச் சோதனையில், 40 பேருக்கு சிறுநீரகத்தில் உப்பின் அளவு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.சிறுநீரக செயல் இழப்பு என்பது, தொற்று நோய் இல்லை. குடிநீரில் உப்பின் அளவு அதிகம் இருப்பதே அதற்கு காரணம்.இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தும், அங்கு வினியோகிக்கப்படும் குடிநீர் தகுதியானதா என, அரசு அதிகாரிகள் சோதனை நடத்தி, உண்மையை வெளியிட
மறுக்கின்றனர். தரமற்ற குடிநீர் காரணமாக, செங்காடு போல பல பின்தங்கிய கிராம மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்குகின்றனர். அவர்களுக்காக, அரசு அதிகாரிகள் யாரும் கவலைப்படுவதில்லை; நடவடிக்கை எடுப்பதில்லை.அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் நிரப்பப்படும் நீரை சோதனை செய்து, அது குறித்த விபரத்தை மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.மக்கள் நல்வாழ்வில் நாட்டம் உடைய தமிழக அரசு, தரமான குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் நோய் வரும் முன் காக்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X