புதுடில்லி:கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து, டில்லியில் வசிக்கும் பா.ஜ., - எம்.பி., கவுதம் காம்பீரின் வீட்டிற்கு வெளியே, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராஜேந்திர நகர் பகுதியில், கிழக்கு டில்லி தொகுதியின் லோக்சபா எம்.பி.,யும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான கவுதம் காம்பீர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்பீருக்கு நேற்று முன்தினம் இரவு, காஷ்மீரில் இயங்கி வரும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர், மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அந்த மின்னஞ்சலில், 'உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நாங்கள் கொலை செய்ய இருக்கிறோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த காம்பீர், தன் தனிப்பட்ட செயலர் கவுரவ் அரோரா வாயிலாக, மத்திய டில்லிக்கான போலீஸ் துணை கமிஷனர் ஸ்வேதா சவுகானுக்கு புகார் கடிதம் அனுப்பி வைத்தார்.
இந்த புகாரை தொடர்ந்து, கவுதம் காம்பீரின் வீட்டிற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணையை, சிறப்பு பிரிவு போலீசார் துவக்கி உள்ளனர். எனினும் இது குறித்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE