'துாத்துக்குடி நகரில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக உள்ளது. இதற்கு, அங்கே இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை தான் காரணம்' என போராட்டக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அண்ணா பல்கலையின் ஆய்வு அறிக்கை, சாலை துாசும், வாகன புகையுமே இதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவிக்கிறது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல், காலம் தாழ்த்தியதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நாடெங்கிலும் உள்ள காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக 800 கண்காணிப்பு மையங்களையும், 250 தொடர் கண்காணிப்பு மையங்களையும் நிர்வகித்து வருகிறது.இதன் வாயிலாக, 124 நகரங்களில் காற்றின் தரம் பேணப்படவில்லை என்று கண்டுபிடித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை, காற்றின் தர மதிப்பீட்டு இலக்குகளை, இந்த நகரங்கள் எட்டவில்லை என்றே இதற்கு அர்த்தம்.துாத்துக்குடியில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்கு, 20 ஆண்டுகளாக ஏ.வி.எம்., ஜுவல்லரி, சிப்காட் மற்றும் ராஜா ஏஜன்சீஸ் ஆகிய மூன்று இடங்களில் கண்காணிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.
கண்டுபிடிப்பு
கடந்த 2011 - 2018 காலகட்டத்தில், துாத்துக்குடி கண்காணிப்பு மையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 'சல்பர் - டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு'களின் அளவு, இலக்குக்குள்ளேயே இருந்தன.ஆனால், இதே காலகட்டத்தில், 10 மைக்ரோ மீட்டர் விட்டத்துக்கு குறைவாக இருக்கும் துகள்களை, 'பார்ட்டிகுலேட் மீட்டர் - பி எம் 10' என்றும் அழைப்பர் - ஆண்டு சராசரி, அளவுக்கு அதிகமாக இருப்பதாக தெரியவந்தது.
அதனால், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்றின் தர இலக்கை எட்டாத நகராக துாத்துக்குடியை வகைப்படுத்தியது.இதனால் தான், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின் படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், துாத்துக்குடி காற்று மாசுக் காரணமான அம்சங்களை கண்டுபிடிக்கும் ஆய்வை, 2019 மார்ச் மாதத்தில் துவங்கியது.
இந்த ஆய்வை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்காக, அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு மையம் மேற்கொண்டு, 2019 ஏப்ரலில் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தான், தற்போது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
துாத்துக்குடி காற்றில் உள்ள 'பி எம்10' துகளின் அளவு, 1 கன மீட்டரில் 40 முதல் 174 மைக்ரோ கிராம் வரை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இது, வரையறுக்கப்பட்ட அளவுகளைவிட மிக மிக அதிகம். அதாவது, ஆண்டு சராசரியான, 1 கன மீட்டரில் 60 மைக்ரோ கிராம் துகள் மற்றும் நாள் சராசரியான 1 கன மீட்டரில் 100 மைக்ரோ கிராம் துகள் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில், அதைவிட பன்மடங்கு அதிகமாக பி எம் 10 துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
என்ன காரணம்
இந்த ஆய்வு நடத்தப்பட்டது, 2019 மார்ச் மாதம். அதற்கு ஓராண்டுக்கு முன், 2018 மே மாதம் தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, துாத்துக்குடியின் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் தாமிர ஆலை தான் காரணம் எனக் கூறி, அதை நிரந்தரமாக மூடிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி, 10 மாதங்களுக்கு பின்னும், பி எம்10 துகளின் அளவு அதிகமாக இருப்பதற்கும், காற்றில் மாசு ஏற்பட என்ன காரணம் என்று அண்ணா பல்கலை பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலை துாசில் இருக்கும் சிலிக்கா, எரிபொருள் பயன்பாடு, 'பையோ மாஸ்' எரிப்பு மற்றும் வாகனங்களின் புகை உமிழ்வு ஆகியவையே அதற்கு காரணம் எனக் கூறியுள்ளது. பையோ மாஸ்எரிபொருட்களின் பயன்பாடு இருப்பதால் தான், காற்றில் சல்பேட் மற்றும் நைட்ரேட் உள்ளது. பையோ மாஸ் எரிப்பால் தான், காற்றில் பொட்டாசியம் கலந்திருக்கிறது.
கட்டுமானம், சிமென்ட் பயன்பாட்டால் கால்சியம் மற்றும் மாங்கனிசியத்தின் அளவும் காற்றில் அதிகம் கலந்துள்ளது.அதாவது, துாத்துக்குடியின் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலையே காரணம் எனக் கூறி வந்தவர்களின் கருத்துகளுக்கு எதிராக, அண்ணா பல்கலை ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது.
மேலும், 10 ஆண்டுகளில், துாத்துக்குடியில் உள்ள கண்காணிப்பு மையங்களில் எடுக்கப்பட்ட பி எம் 10 துகள் அளவு, 2019ல் எடுக்கப்பட்டதைவிட குறைவாகவே உள்ளது என்பது, இதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 2019 ஏப்ரல் மாதமே, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் வழங்கப்பட்ட ஒரு பிரமாண பத்திரத்தின் ஒரு பகுதியாக, இந்த அறிக்கை 2020 அக்., 8ல் தான் வெளியிடப்பட்டது.அதுவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், தன் இறுதி தீர்ப்பை 2020 ஆக., 18ல் வழங்கிய பின், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE