ஜெயலலிதா வீட்டை அரசுடைமையாக்கியது செல்லாது! | Dinamalar

ஜெயலலிதா வீட்டை அரசுடைமையாக்கியது செல்லாது!

Updated : நவ 25, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (45) | |
சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இல்லத்தின் சாவிகளை, அவரதுவாரிசுதாரர்களிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக ஜெயலலிதா
 ஜெயலலிதா , வீடு, அரசுடைமை,  செல்லாது!

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இல்லத்தின் சாவிகளை, அவரதுவாரிசுதாரர்களிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றார். ஆனால், பதவியேற்ற ஐந்து மாதங்களில் உடல் நலம் சரியில்லாமல், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; 2016 டிச., 5ல் இறந்தார்.ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க கோரி, அ.தி.மு.க.,வை சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக, அவரது சகோதரரின் மகள் தீபா மற்றும் மகன் தீபக் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள, 'வேதா நிலையம்' வீடு மற்றும் அங்குள்ள நிலத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக அரசு கையகப்படுத்தியது.67.16 கோடி ரூபாய்வேதா நிலையத்துக்கான இழப்பீடாக 67.16 கோடி ரூபாய் தோராயமாக நிர்ணயிக்கப்பட்டு, சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக, வருமான வரித்துறையும் கோரியது.அரசின் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்தும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை கைவிட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரியும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா, தீபக் வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவு:பொது மக்களின் பணத்தில் நினைவு இல்லம் அமைக்கும் அரசின் முடிவு மக்களுக்கு பயனுள்ளதா; ஏற்கனவே மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் 80 கோடி ரூபாய் செலவில் அது கட்டப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் இருந்து, ஜெயலலிதாவின் இல்லம் சில கி.மீ., தொலைவில் தான் உள்ளது.மெரினா நினைவிடம் சொல்லாத எந்த விஷயத்தை, வேதா நிலையம் சொல்லப் போகிறது. ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்துவதில், என்ன பொது நோக்கம் உள்ளது.வேதா நிலையத்தை கையகப்படுத்துவதற்காக அளிக்கப்படும் விலையால், பொது மக்கள் எப்படி பலன் அடைகின்றனர் என்பதற்கு, அரசு திருப்திகரமாக விளக்கம் அளிக்கவில்லை.
பொது நோக்கத்தின் தன்மை என்ன; எப்படி பொது மக்கள் பயன் அடைவர் என்பதை விளக்க, அரசு முயற்சிக்கவில்லை.வேதா நிலையத்தை கையகப்படுத்தும் அரசின் நோக்கத்துக்கு, தீபா, தீபக் இருவரும் ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர்கள் வேதா நிலையத்தின் உரிமையாளர்கள் அல்ல என்ற நிலையை எடுத்துள்ளார்.


உரிமை உள்ளது

அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில், சட்டப்பூர்வ வாரிசுகளை கண்டறிய வேண்டியதுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இறந்தவர், சாதாரணமானவர் அல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து, முதல்வரானவர். முதல்வராக இருக்கும் போதே மறைந்தார்.அரசு சார்பில் இறுதி மரியாதை நடக்கும் போது, அவருக்கான இறுதி சடங்குகளை, மனுதாரர்களில் ஒருவரான தீபக் மேற்கொண்டார்.தீபக் அவரது வாரிசு என்பதை, அப்போது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி மறைமுகமாக அங்கீகரித்தது போல் ஆகாதா; இருந்தும் வாரிசு சான்றிதழ் கோரி தாசில்தாரை தீபக் அணுகிய போது, அவர் மறுத்துள்ளார்.கையகப்படுத்துவதற்கான முதல்கட்ட அறிவிப்பாணையை வெளியிடும் போது, அதில் விலக்கு கோரி கலெக்டரிடம் விண்ணப்பிக்க, நில உரிமையாளருக்கு உரிமை உள்ளது. ஆனால், மனுதாரர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.


அவசர சட்டம்

மனுதாரர்கள், உரிமையாளர்கள் அல்ல என அரசு கருதியிருக்கலாம். வேதா நிலையத்தில் உள்ள பொருட்களையும், அசையும் சொத்துக்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.பொது நோக்கத்துக்காக என்பதை யூகித்துக் கொண்டாலும், கையகப்படுத்துவதற்காக பின்பற்றிய முறையை பாராட்ட முடியவில்லை. வேதா நிலையத்தை கையகப்படுத்துவதில், பொது நோக்கம் இருப்பதாக கூற முடியாது.எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்ட இழப்பீட்டு தொகை, அரசுக்கு திருப்பி வரப்பட வேண்டும்.மாவட்ட கலெக்டர் வசம் உள்ள வேதா நிலையத்தின் சாவிகளை, மூன்று வாரங்களுக்குள், மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கியை, வருமான வரித்துறை சட்டப்படி வசூலித்துக் கொள்ளலாம்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X