திருப்பூர்: சிறுபான்மையின மாணவ, மணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது குறித்து, டில்லியில் இருந்து வந்திருந்த குழுவினர் நேற்று மேலாய்வு செய்தனர்.மத்திய, மாநில அரசு திட்டத்தில், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், பள்ளி மற்றும் கல்லுாரி வாரியாக விண்ணப்பித்து, வங்கி கணக்கில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படுகிறது. அடுத்துவரும் கல்வியாண்டில், சரியான பயனாளிக்கு, கல்வி உதவி சென்றடைந்ததை, உயர்மட்ட குழுவினர், நேரடி ஆய்வின் மூலம் உறுதி செய்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, கல்வி உதவித்தொகை வழங்கியது குறித்து, டில்லியில் இருந்து வந்திருந்த சிறப்பு குழுவினர் நேற்று மேலாய்வு செய்தனர். சிறுபான்மையின மாணவ, மாணவியர் வரவழைக்கப்பட்டு, சான்றிதழ்கள், வங்கி கணக்கு புத்தகங்களை ஆராய்ந்து பார்த்து, கல்வி உதவி வழங்கியது குறித்து தணிக்கை மேற்கொண்டனர்.இதுகுறித்து டில்லியில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசு திட்டத்தில், கல்வி உதவித்தொகை வழங்கியது குறித்து, பயனாளிகளிடம் மேலாய்வு நடத்தப்படுகிறது. இதன்மூலம், சரியான பயனாளிக்கு உதவி சென்றடைந்தது உறுதி செய்யப்படுகிறது,' என்றனர்.