திருப்பூர்: மூலப்பொருள் விலை உயர்வை கண்டித்து, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் துவக்கியுள்ளன.திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து, 50க்கும் மேற்பட்ட ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. சாயம், விறகு உட்பட அனைத்துவகை மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், இந்நிறுவனங்களில் உற்பத்தி செலவினம் பலமடங்கு அதிகரித்துள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் அசோசியேஷன் (ரோஸ்பா) அறிவித்த, இரண்டுநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது. திருப்பூர் - தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு பகுதி மற்றும் ஈரோட்டில் உள்ள 90 ரோட்டரி பிரின்டிங் நிறுவனங்கள், போராட்டத்தில் பங்கேற்று, உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளன.'ரோஸ்பா' சங்க தலைவர் மிதுன்ராம் ராஜூ பழனிசாமி கூறியதாவது:பிரின்டிங் மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க கோரியும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனங்கள், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளன. இன்று (நேற்று) மற்றும் நாளை (இன்று) ரேஸ்பா சங்கம் சார்பில், உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.நுால் விலை உயர்வை கண்டித்து, அனைத்து அமைப்புகள் சார்பில், 26ம் தேதி (நாளை) முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய போராட்டத்திலும், ரோட்டரி பிரின்டிங் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. போராட்டத்தால், நாளொன்றுக்கு 7 கோடி மதிப்பிலான ரோட்டரி பிரின்டிங் உற்பத்தி பாதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.