கள்ளக்குறிச்சி, : சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி க.மாமனந்தல் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட சேர்மன், துணை சேர்மன் மற்றும் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த அக்., மாதம் 22 ம் தேதி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் ஊராட்சியில் 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின் போது,
இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 6 வது வார்டு கிராம ஊராட்சி உறுப்பினர் பத்மாவதி சசிகுமார், சென்னை ஐகோர்ட்டில் ஊராட்சி துணை தலைவர் தேர்தலை உடனடியாக நடத்தகோரி வழக்கு தொடர்ந்தார்.அதில், ஊராட்சி துணை தலைவர் தேர்தலை நேற்று (24 ம் தேதி) நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜா, ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நேற்று நடத்தினார்.
இதில், 6 வது வார்டு உறுப்பினர் பத்மாவதி, 5வது வார்டு உறுப்பினர் கோபால் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.இதில், பத்மாவதி 4 ஓட்டுகள், அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபால் 2 ஓட்டுகள் பெற்றனர். இதனையடுத்து, ஊராட்சி துணை தலைவராக பத்மாவதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE