ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை:மாநில சட்டசபை தலைவர்களின் மாநாட்டில் தமிழக சபாநாயகர் அப்பாவு, 'பார்லிமென்ட், சட்டசபைகளை 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக்க முனைகின்றனர். படிப்படியாக ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டு போக முனைகின்றனர்' என சுட்டிக் காட்டி பேசியது பாராட்டுக்குரியது.
தமிழக சபாநாயகரான அவர், மோடி அரசு மற்றும் மத்திய அரசை பாராட்டியா பேசுவார்... நீங்கள் அவரை வரவேற்று பேசுவது வினோதமல்ல. நீங்கள் மட்டுமல்ல, உங்கள் கூட்டணி கட்சியினர் அனைவருமே வரவேற்கத் தான் செய்வீர்கள். உங்களின் கூட்டணி அரசியல், தமிழகம் அறிந்தது தானே!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கோவை, சரவணம்பட்டி அருகே 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் செய்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கும், பெற்றோருக்கும் அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இது போன்ற அரக்கர்களை ஈவு, இரக்கமின்றி தண்டிக்க வேண்டும். சட்டங்கள் வலுவாக இருந்தாலும், அவை பயன்படுத்தப்படுவது இல்லையோ!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: புதிய, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது. அவசர சட்டத்தின் வாயிலாக, அதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதே நேரத்தில், காங்., கூட்டணி அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்., கூட்டணியில் இருந்தபடி, அந்த அரசு அறிமுகம் செய்த சட்டம் வேண்டாம் என சொல்வீர்களா... இதுபோல அவ்வப்போது பேசித் தானே, கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்!
இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அறிக்கை: குமரி மாவட்டத்தில், ஜாதி மத கலவரத்தை துாண்டும் நோக்கத்தில், நாடார் சமுதாயம் குறித்து, மிகவும் தரக்குறைவாக, சி.எஸ்.ஐ., குன்றத்துார் உயிர்த்தெழுந்த மீட்பர் சர்ச்சில் பேசிய நபர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.
அவர் ஒருவர் தான் என்றில்லை. நிறைய பேர் இப்படித் தான் கிளம்பி விட்டனர். சமூக வலைதளங்களில் பேசிய அவர்கள் இப்போது, நேரடியாகவும் உரை நிகழ்த்த துவங்கி விட்டனர்!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: 'ஆன்லைன்' விளையாட்டுகள் வாயிலாக பணம் பறிக்கும் தொழிலை முற்றிலுமாக முடக்க வேண்டும். வேறு பெயரில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எந்த நிறுவனமும் ஆன்லைனில் விளையாட்டுகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
நீங்களும் தான் அவ்வப்போது இது தொடர்பாக கோரிக்கை வைக்கிறீர்கள். கேட்க மாட்டேன் என்கின்றனரே... மத்திய அமைச்சராகி நீங்களாக சட்டம் இயற்றினால் தான் உண்டு!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE