சென்னை: மதம் மாறியவர்களுக்கு, கலப்பு திருமணத்திற்கான சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்று வழங்க முடியாது எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இதனை எதிர்த்து பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (நவ.,25) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை' எனக் குறிப்பிட்ட நீதிபதி, 'ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன், மனைவிக்கு கலப்பு திருமண சான்று பெற தகுதியில்லை' எனக் குறிப்பிட்டார். மேலும், 'மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும்' எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE