தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: தற்போது அதிக மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் வீணானது உண்மை தான். கடந்த பத்து ஆண்டுகளாக, அ.தி.மு.க., அரசு, நீர் நிலைகளுக்காக எந்த பணியும் செய்யவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. இனி ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே நீரை தேக்கி வைக்க, தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதுபடியே, கடந்த பத்தாண்டுகளாக, அ.தி.மு.க., அரசில் எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு முன், ஐந்து முறை ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளீர்களே... அப்போதும் நீங்கள் ஒன்றும் செய்யவில்லையே. நீங்கள் இப்போது சொல்வதெல்லாம், சமாளிப்பு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: 'சமூகநீதியை நிலைநாட்ட 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி நடத்த வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது; இது வரவேற்கத்தக்கது. அதுபோல, தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
'டவுட்' தனபாலு: இரண்டொரு நாட்களுக்கு முன், '41 ஆண்டுகளாக அரசியலில் இருந்தும், ஆட்சியை பிடிக்க முடியவில்லையே' என, உங்கள் தந்தையும், பா.ம.க., நிறுவனருமான ராமதாஸ் வருந்தினார். அதற்கு இதுவும் ஒரு காரணமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஜாதி, சமூக நீதி, இட ஒதுக்கீடு என பேசாமல் ஓராண்டு இருந்து பாருங்கள்; ஓட்டுகள் தானாக வந்து விழும், உங்கள் கட்சிக்கு!
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: மதுரையில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பஸ் டிரைவர், தனியார் வாகனத்துக்கு வழி கொடுக்கவில்லை எனக் கூறி, அதன் டிரைவர், அரசு பஸ் டிரைவரை, இரும்பு கம்பியால் தாக்கியது மன வேதனையை அளிக்கிறது. அரசு பஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, தமிழகத்தில் நிலவுகிறது. சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என, சமீப காலமாக பல தரப்பினரும் கவலைப்படுகின்றனர். அதை உண்மை என நிரூபிக்கும் வகையில், தினமும் இது போன்ற சில குற்றங்கள் நிகழ்கின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது, சமூக வலைதளங்களே கதி என இருந்த ஸ்டாலின், இப்போது அதில் வரும், தன் கட்சியினரின் அட்டூழியங்களை பார்ப்பதில்லையோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE