''பொதுமக்கள், சமுதாயம், நீதிமன்றம், வழக்காடிகள் நலன் கருதி பணியாற்ற வக்கீல்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்ட தினத்தில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று கோவை வக்கீல்கள் சங்க தலைவர் பி.ஆர்.அருள்மொழி கூறினார்.நவ.,26ம் தேதியான இன்று, நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய சட்ட தினமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.இது பற்றி கோவை வக்கீல் சங்க தலைவர் பி.ஆர்.அருள்மொழி கூறியதாவது:கோவை வக்கீல்கள் சங்கம், பாரம்பரிய பெருமை கொண்டது. 3500 முழு நேரஉறுப்பினர்கள் உட்பட,5000 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கம், வக்கீல்கள், பொதுமக்கள், நீதிமன்றம், சமுதாய நலன் கருதி, 150 ஆண்டுகளாக செயல்படுகிறது.அரசியலமைப்பு சட்ட தினமான இன்று, நாம் அனைவரும் சட்டத்தின்படி பணியாற்றவும், பொதுமக்களுக்கும், சமுதாயத்துக்கும் சேவையாற்றவும் உறுதி ஏற்பது அவசியம்.பொதுமக்களிடம் போதிய சட்ட விழிப்புணர்வு இல்லை.குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டம் உள்ளது. அது பற்றியும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் படித்தவர்களுக்கு கூட தெரிவதில்லை. அரசு இயற்றியுள்ள ஒவ்வொரு சட்டத்துக்கும், ஒரு முக்கியத்துவம் உள்ளது.அனைவரும் அவற்றை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.பொதுமக்கள், சமுதாயம், வழக்காடிகள், நீதிமன்றத்தின் நலன் கருதி பணியாற்ற வேண்டும் என்று வக்கீல்கள் அனைவரும், உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.இந்த நல்ல நாளில், வக்கீல்கள் அனைவருக்கும் கோவை வக்கீல்கள் சங்கம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.இவ்வாறு, அருள்மொழி தெரிவித்தார்.பேட்டியின்போது, வக்கீல்கள் சங்க செயலாளர் கலையரசன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE