புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
பரிந்துரை
இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில் இருந்து பல வகையிலும் வளர்ச்சி அடைந்து, மாறுதல்களை சந்தித்து உள்ளது.அதே நேரத்தில் அவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையும் மாற வேண்டியது அவசியமாகிறது.முன் இருந்ததைவிட பல மடங்கு அதிகமானோர் தற்போது பயன்படுத்துகின்றனர். கையில் வைத்தே பார்க்கக்கூடிய அளவுக்கு வெகுவாக மாறியுள்ளது.
இந்நிலையில் உலகிலேயே அதிக அளவில் இணையதளத்தை பயன்படுத்தும் நம் நாட்டில், இவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையில் மாற்றம் செய்யப்படவேயில்லை.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை உண்மை என, இளைஞர்கள் உட்பட பலரும் நம்புகின்றனர்.
அந்த நம்பிக்கையை வீணடிக்கக் கூடாது. அந்தப் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மை தன்மையை தெரியபடுத்த வேண்டியது அவசியம்.ஆனால் இந்தப் பதிவு களுக்கு யார் பொறுப்பேற்பது. அதை நிர்ணயிப்பது தொடர்பாக இந்த அமைப்பு முடிவு எடுத்து பரிந்துரை அளிக்க வேண்டும்.தற்போது இந்த தளங்கள் அனைத்தும் வெறும் கருத்து பரிமாற்றத்துடன் முடிவடையவில்லை. இ - காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தகம் அதிகரித்துள்ளதால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 'சைபர்' குற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
வழிமுறை
தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசியதாவது:இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களுக்காக நாம் உருவாக்கும் நிர்வாக நடைமுறைகள் உலகுக்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அடுத்த சில ஆண்டு களில் நம் நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிடும்.அதை நினைவில் வைத்து வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE