திருப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்... ஓங்கி ஒலிக்கும் குரல்! தொழிலை பாதுகாக்க ஒன்றிணைத்த அமைப்பினர்| Dinamalar

தமிழ்நாடு

திருப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்... ஓங்கி ஒலிக்கும் குரல்! தொழிலை பாதுகாக்க ஒன்றிணைத்த அமைப்பினர்

Updated : நவ 26, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
திருப்பூர்: பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தகோரி, அனைத்து தொழில் அமைப்பினர் சார்பில், திருப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.பஞ்சு விலை உயர்வால், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை தொடர்ந்து உயர்த்திவருகின்றன. இம்மாதம் மட்டும், அனைத்து ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தி
திருப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்...  ஓங்கி ஒலிக்கும் குரல்! தொழிலை பாதுகாக்க ஒன்றிணைத்த அமைப்பினர்

திருப்பூர்: பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தகோரி, அனைத்து தொழில் அமைப்பினர் சார்பில், திருப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
பஞ்சு விலை உயர்வால், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை தொடர்ந்து உயர்த்திவருகின்றன. இம்மாதம் மட்டும், அனைத்து ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் அபரிமிதமாக அதிகரித்துள்ளது.புதிய ஆர்டர்களை பெறமுடியாமலும், பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிக்க முடியாமலும் நிறுவனங்கள் தவிக்கின்றன.
பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பின்னலாடை தொழில் அமைப்பினர் சார்பில், முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்கிறது.திருப்பூரின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் பின்னலாடை துறையை பாதுகாப்பதற்காக நடத்தப்படும் இப்போராட்டத்துக்கு, 117 அமைப்பினர் ஆதரவு அளித்துள்ளனர். ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.அனைத்து கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்படுகிறது. பின்னலாடை சரக்கு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மாநகராட்சி அலுவலகம் முன், காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை, உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தற்போது நுால் விலை உயர்ந்துள்ளது. இம்மாதம் மட்டும், கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்தவகையில், 100 கிலோ கொண்ட ஒரு கேஸ்க்கு, ஐந்தாயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தி, பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதரமாக உள்ள பின்னலாடை துறையை பாதுகாப்பதற்காகவே, முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு, பஞ்சு, நுால் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'தினமலர்' செய்தி வைரல்...திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் அடியெடுத்துவைத்த காலம் முதலே, பஞ்சு, நுால் விலை உயர்வு பிரச்னை தொடர்கிறது. கடந்த, 1994ம் ஆண்டு, ஜன., முதலான 90 நாட்களில், 100 கிலோ கொண்ட ஒரு கேஸ் நுால், 2,500 ரூபாய் வரை விலை உயர்ந்தது.இதனை எதிர்த்து, அந்தாண்டு ஏப்., 13ம் தேதி, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் இணைந்து, ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதில், தொழில்துறையினர் 312 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், அடுத்த நாள், முதல் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 27 ஆண்டுக்கு முந்தைய போராட்டத்தை நினைவு கூறும் வகையில்,'தினமலர்' செய்தியை, திருப்பூர் தொழில் துறையினர், நேற்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X