சென்னை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 82.32 கோடி ரூபாய் வரி செலுத்தும்படி, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சோதனை
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2016 டிசம்பரில் இந்தச் சோதனை நடந்தது.
இதன் அடிப்படையில், 2015 - 16ம் ஆண்டுக்கான வரியாக 20 லட்சம் ரூபாய்; 2017 - 18க்கான வரியாக 82.12 கோடி ரூபாய் செலுத்தும்படி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், 30 நாட்களுக்குள் இதை செலுத்தும்படி கூறப்பட்டது. 2021 செப்டம்பர் 28ம் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மனுக்கள் தாக்கல் செய்தார்.இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.
தள்ளி வைப்பு
இவ்வழக்கில் எழுப்பப்பட்ட பிரச்னையை பரிசீலிக்க வேண்டி உள்ளதால், உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என, முதல் பெஞ்ச் தெரிவித்து உள்ளது.
பதில் மனு தாக்கல் செய்யும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிச., 8க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது. வருமான வரித்துறை மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும், வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE