சென்னை:தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போதைய சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பில்லை. நிலப்பகுதிக்கும், கடல் பகுதிக்கும் இடையே, காற்றின் அழுத்தத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படாததால், வளிமண்டல சுழற்சி வலுப்பெறாமல் அப்படியே நீடிக்கிறது.
நாளை மறுதினம் வரைவளிமண்டல சுழற்சியால், நாளை மறுதினம் வரை பல மாவட்டங்களில் கன மழை நீடிக்கும். இன்று முதல் நாளை காலை 8:30 மணி வரையிலான காலகட்டத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும்.நாளை மறுதினம் திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன மழை பெய்யும்.
புதிய காற்றழுத்தம்
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும்; குமரி கடல், மாலத்தீவு பகுதிகளில் நாளையும் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகரும்.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், வளிமண்டல சுழற்சியால் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு, இன்று பகல் வரையிலும் 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE